விஜய்யின் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் கடைசியில் நடைபெறுவதால், விழாவிற்கான வேலைகள் மும்முரமாக ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம், வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’க்கான படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்கள். இதுகுறித்த தகவல்கள் இனி…

விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இதில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் அசத்த உள்ளார் என்கிறார்கள். மகன் கதாபாத்திரத்தில் இளமையான தோற்றத்திற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் உள்ள வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்திற்குச் சென்றார் விஜய்.
அங்கு ஆரம்பக் கட்ட வேலைகள் முடிந்த பின்னர், இருவரும் இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்கள். அப்பா விஜய்யின் ஜோடியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன் எனப் பலரும் பரிசீலிக்கப்பட்டு இப்போது சினேகா நடிப்பார் என்ற பேச்சு இருக்கிறது. சின்ன வயது விஜய்யின் ஜோடியாக பிரியங்கா மோகன் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ‘தளபதி 68’க்கான படப்பிடிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவின் நவீனத் தொழில்நுட்பம் பற்றியும், நினைத்த தோற்றத்தை அதில் கொண்டு வர முடியும் என்ற தகவல் அறிந்ததும் விஜய்யும், வெங்கட்பிரபுவும் அமெரிக்கா பறந்தனர். இந்நிலையில் இசை வெளியீட்டுக்குப்பின் படப்பிடிப்பைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளனர். ‘லியோ’வில் அரசியல் வசனங்கள் அவ்வளவு வைக்கவில்லை ஆனால், ‘தளபதி 68’ல் அனல் பறக்கும் வசனங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம் என்றும், விரைவில் பாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைகிறார் என்றும் சொல்கிறார்கள்.