அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறந்துவிடுவார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் செட்டிலாக நினைக்கும் இந்தியர்களின் லட்சியமே, `கிரீன் கார்டு’ பெறுவது தான். அமெரிக்காவில் நிரந்தரமாக வாசிப்பதற்கான குடியுரிமையை இந்த கிரீன் கார்டு உறுதிப்படுத்துகிறது.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் போகும் கிரீன் கார்டு கைக்கு வராது, அப்படி வருவதற்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறந்துவிடுவார்கள் என அமெரிக்காவைச் சேர்ந்த பொது கொள்கைகளை ஆய்வு செய்யும் அமைப்பான கேட்டோ இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், “வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளில் 7 சதவிகிதம் மட்டுமே ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க முடியும்.
ஆனால், அமெரிக்காவில் நிலுவையில் உள்ள 1.8 மில்லியன் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களில், 63 சதவிகிதம் இந்தியாவைச் சேர்ந்தவை.
வேலை அடிப்படையிலான (EB-2 and EB-3 categories) கிரீன் கார்டு பெறுவதற்காக இந்தியர்களிடமிருந்து 11 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதனால் புதியதாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், நீண்ட காத்திருப்பு காலத்திற்குள் சிக்கியுள்ளனர். இவர்கள் கிரீன் கார்டுகளுக்காக 134 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடும்.

வேலை அடிப்படையில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் சுமார் 4,24,000 பேர் காத்திருந்து இறக்க நேரிடும். இவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்தியர்களாக இருப்பார்கள். இதனால் இந்தியர்கள் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
ஏனெனில், கிரீன் கார்டு விண்ணப்பங்களில் பின்தங்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க வணிகங்களில் மேம்பட்ட பட்டப்படிப்புகளுடன் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டுள்ளனர். கிரீன் கார்டுகளுக்காக நீளும் காத்திருப்பு நேரம் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.