உள்ளத்தை அள்ளித்தா: 90-ஸின் காவாலய்யா ‘அழகிய லைலா’; கார்த்திக்-கவுண்டமணி கூட்டணியில் ரகளையான சினிமா

சில திரைப்படங்கள் எதற்கு ஓடியது என்றே தெரியாமல் கன்னாபின்னாவென்று ஓடி பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை அடைந்து விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று ‘உள்ளத்தை அள்ளித்தா’.

இத்தனைக்கும் இதன் அடிப்படையான கதை, 1958-ல் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ படத்தின் அப்பட்டமான உருவல். அது மட்டுமல்லாமல் பொம்மலாட்டம் (1968) என்கிற தமிழ்ப்படம், Andaz Apna Apna (1994) என்கிற இந்திப்படம் ஆகியவற்றின் அழுத்தமான சாயலும் உண்டு.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக், கவுண்டமணி

கதை, காட்சிகள் மட்டுமல்ல, பாடல்களும் கூட சர்வதேச அளவில் கன்னாபின்னாவென்று பாரபட்சம் பார்க்காமல் உருவப்பட்டவையே. எகிப்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று அங்குள்ள பிரபலமான பாடல்களை நகலெடுத்தார் இசையமைப்பாளர் சிற்பி.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றி தமிழ் சினிமாவில் பல புதிய கதவுகளைத் திறந்தது. இதற்குப் பிறகு ஏராளமான நகைச்சுவைத் திரைப்படங்கள் குவியத் தொடங்கின. ரம்பாவிற்கு பெரிய பிரேக் தந்து, அவரது காலை கணிசமான தொகைக்கு இன்ஸூரன்ஸ் செய்ய வைத்தது இந்தப் படம்தான். இதில் வரும் ‘அழகிய லைலா’ பாடலை, அந்தக் காலத்தின் ‘ரா நூ காவாலய்யா’ எனலாம். இயக்குநர் மணிவண்ணனின் பாதையை மாற்றி அவரை பிஸியான நகைச்சுவை நடிகராக்கியதும் இந்தப் படமே. கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர்.சி கூட்டணியில் ஏராளமான திரைப்படங்கள் இதற்குப் பிறகு வெளிவந்தன.

ஆள் மாறாட்டக் காமெடி

மிலிட்டரி ஆஃபிசரின் மகன் கார்த்திக். ‘எனக்கு டிஸிப்ளின்தான் முக்கியம்’ என்று பல கறாரான விதிகளைத் தந்து காலை நான்கு மணிக்கே எழுந்து ஓட வைக்கும் தந்தையின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் ஊட்டிக்கு தப்பிச் செல்கிறார். அங்கு பிராடு வேலைகளைச் செய்து பிழைக்கும் கவுண்டமணியின் வீட்டில் தங்குகிறார். ரம்பாவைப் பார்த்ததும், குறிப்பாக அவரது கால்களைப் பார்த்ததும் உடனே காதலில் விழுகிறார்.

ஒரு சண்டைக்காட்சியில் ரம்பாவைக் காப்பாற்றி அவரது வீட்டில் டிரைவராகச் சேர்கிறார். ரம்பாவின் தந்தையான மணிவண்ணனும் கார்த்திக்கின் தந்தையான ஜெய்கணேஷூம் நண்பர்கள். திருமண சம்பந்தம் செய்யலாம் என்ற உத்தேசித்திருப்பவர்கள். நண்பரின் மகன்தான் தன் வீட்டில் டிரைவராக வந்திருக்கும் கார்த்திக் என்பது தெரியாமல் இருக்கும் மணிவண்ணன், சூழல் காரணமாக கவுண்டமணியை தனது மாப்பிள்ளை என்று தவறாக நினைத்து அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

கார்த்திக், மணிவண்ணன், ரம்பா

மணிவண்ணனின் அதே தோற்றத்தில் இருக்கும் அவரது தம்பி, அண்ணனை வீழ்த்தி விட்டு சொத்துக்களை அபகரிக்க முயல்கிறார். இதன் தொடர்ச்சியாக பல ஆள் மாறாட்டக் கலாட்டாக்கள் நடக்கின்றன. ஒரு சண்டைக்காட்சிக்குப் பிறகு உண்மை தெரிகிறது. வழக்கம் போல் லேட்டாக வரும் காவல்துறை கெட்டவர்களை மட்டும் சரியாக அடையாளம் கண்டு கைது செய்கிறது. சுபம்.

இந்தப் படத்தின் ஹீரோவாக முதலில் விஜய்யைத்தான் அணுகினார்களாம். கால்ஷீட் பிரச்சினை. படத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக கார்த்திக் உள்ளே வந்தார். அதைப் போலவே ரோஜா, ரவளி (இன்னொரு கால் இன்ஸூரன்ஸ்) ஆகிய இருவர்களில் ஒருவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது. தேதிப்பிரச்சினை காரணமாக அவர்கள் வர முடியாமல் போக ரம்பாவிற்கு அதிர்ஷ்டம் அடித்தது.

ரகளை செய்த கார்த்திக் + கவுண்டமணி கூட்டணி

அழகான ஹீரோவாக புகழ் பெற்றிருந்த கார்த்திக், உணர்ச்சிகரமான சீன்களில் நடித்து சிறப்பான நடிகர் என்கிற பெயரையும் பெற்றிருந்தார். கூடவே காமெடியாகவும் நடிக்க வரும் என்பதை நிரூபித்தவர். திரையைத் தாண்டி அவரது இயல்பான ஆளுமையும் ஜாலியான கேரக்ட்டர் என்பதால் இந்த ரோலில் அப்படியே ஐக்கியமானார். அவரது துள்ளலான அசைவுகளும் சிரிப்பும் இந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது. ‘ஐ ஹேட் யூ’ என்று சொல்லிக் கொண்டே கார்த்திக்கை காதலிக்கும் ரம்பா, பல இளமையான காட்சிகளுக்கு காரணமாக இருந்தார். இவருடைய கால் தெரியாத காட்சிகள் படத்தில் மிக அபூர்வம். ஊட்டி குளிரில் எப்படித்தான் நடித்தாரோ?

உள்ளத்தை அள்ளித்தா

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியின் காமெடி ஒரு முக்கியமான பங்கை வகித்தது. பேருந்தில் போலி கண்டக்ட்டராக பணம் வசூலித்து கார்த்திக்கிடம் பிடிபட்டவுடன் ‘சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ரெக்வெஸ்ட் பண்ணி என்னைக் கூப்பிட்டாங்க பிரதர்’ என்று அள்ளி விடுவார். கார்த்திக்கிடமிருந்து தப்பித்து இவர் பல சந்து பொந்துகளில் திரும்பி வீடு சேர்ந்தவுடன் அவருக்கு முன்பாக கார்த்திக் அங்கு அமர்ந்திருப்பது ரசிக்க வைக்கும் காட்சி. தான் பழகியபடியே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும் கார்த்திக், தூங்கிக் கொண்டிருக்கும் கவுண்டமணியின் தண்ணீர் எடுத்து ஊற்றி ஊட்டி குளிரில் உடற்பயிற்சிக்கு கட்டாயப்படுத்துவது அநியாயமான குறும்பு.

கார்த்திக்கின் இடத்தில் வீட்டு மாப்பிள்ளையாக சென்று அமர்ந்து கொள்ளும் கவுண்டமணி அந்தப் பொய்யை தக்க வைத்துக் கொள்வதற்காக படும் பாடுகள் சிரிப்பை வரவழைக்கும். “மாப்பிள்ளை நீங்க நல்லா பாடுவீங்களாமே” என்று மணிவண்ணன் கேட்க, கார்த்திக் மறைவில் இருந்து பாட அதற்குப் பொருத்தமாக கவுண்டமணி வாயை அசைக்கும் காட்சிகள் ரணகளமான காமெடியாக இருக்கும். மணிவண்ணன், ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வந்து விட, ஆள்மாறாட்டம் செய்திருக்கும் கார்த்திக்கும் கவுண்டமணியும் மாற்றி மாற்றி சமாளிக்கும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.

உள்ளத்தை அள்ளித்தா

சுந்தர்.சி படங்களின் டெம்ப்ளேட் காட்சிகள்

ரம்பாவை காதலிக்க ஐடியா தேடும் கார்த்திக், அதற்காக ஒரு பிளானை ஏற்பாடு செய்து ஆளே இல்லாத இடத்தில் ரம்பாவின் பையை கவுண்டமணியை வைத்து இழுக்க வைக்க, எதிர்பாராதவிதமாக அங்கு கூட்டமாக வரும் ஆட்களிடம் மாட்டி கவுண்டமணி தர்மஅடி வாங்குவது, மணிவண்ணனை கடத்தி விட்டு செந்தில் பேரம் பேச,  “டேய். அவ்ளோ தூரம்லாம் வர முடியாது.. நாலாயிரம்தான் தர முடியும். மேல ஐம்பது ரூபா தரேன்.. வரும் போது அவனை சேவிங் பண்ணிட்டு கூட்டிட்டு வந்துடு” என்று அசால்ட்டாக கடத்தல் டீலிங்கை கையாள்வார் கவுண்டமணி. “யோவ். டெம்போல்லாம் வெச்சு கடத்தியிருக்கோம்யா. பார்த்துப் போட்டுக் கொடுங்க” என்கிற வசனம் நடைமுறையில் மிகவும் பிரபலமாகியது. வசனம் எழுதிய கே.செல்வபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்.

கார்த்திக் மற்றும் கவுண்டமணி செய்யும் ஆள்மாறாட்டம் போதாதென்று ஒரே தோற்றத்தில் இருக்கும் இரண்டு மணிவண்ணன்களால் நிகழும் காமெடிகள் தனி டிராக்கில் பயணிக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் நகைச்சுவையையும் அள்ளி விடுவார் மணிவண்ணன். பெங்களூரில் நடக்கும் ஒரு பிஸ்னஸ் மீட்டிங்கில் இருமும் ஒரு கன்னடக்காரருக்கு தண்ணீர் தந்து விட்டு ‘இங்கே கேட்டா கூட தண்ணி தர மாட்டீங்கன்னுதான் நானே ஒரு பாட்டில்ல கொண்டு வந்தேன்’ என்பது குத்தலான நகைச்சுவை. ரம்பாவைக் காப்பாற்றும் கார்த்திக் “அநியாயம் எங்க நடந்தாலும் என்னால பொறுக்க முடியாது சார்” என்று சொல்ல “நீ வேலை இல்லாம வெட்டியா இருக்கறவனா?” என்று மணிவண்ணன் கேட்பது, அனைத்து ஹீரோக்களையும் பங்கம் செய்யும் வசனம்.

உள்ளத்தை அள்ளித்தா

ஆள்மாறாட்டம், கடத்தல், சேஸிங், உருட்டுக்கட்டை போன்ற சுந்தர்.சியின் வழக்கமான படங்களில் உள்ள டெம்ப்ளேட் காட்சிகள் இதிலும் இருக்கின்றன. ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையுடன் துரத்தும் ஒரு நீளமான காட்சியும் அதன் பின்னணி இசையும் ரசிக்க வைக்கும் அளவில் படமாக்கப்பட்டிருந்தது. செந்தில் கூட்டணி செய்யும் கொலை முயற்சிகள் அவர்களுக்கே ஆப்பு வைக்கும் வகையில் முடியும் காட்சிகளும் சிரிக்க வைத்தன.

‘அழகிய லைலா’ – நூ காவாலய்யாவின் முன்னோடி

கார்த்திக்கின் துள்ளல், கவுண்டமணியின் காமெடி, ரம்பாவின் காலழகு போல இந்தப் படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் சிற்பியின் பாடல்களும் மிக முக்கியமான காரணமாக இருந்தன. குறிப்பாக ‘அழகிய லைலா’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அருமை. ‘The Seven Year Itch’ என்கிற ஆங்கிலப்படத்தில் சப்வேயில் வரும் காற்று காரணமாக மர்லின் மன்றோவின் ஸ்கர்ட் காற்றில் மேலே பறக்கும் காட்சி புகழ் பெற்றது. இதை அப்படியே ரம்பாவிற்குப் பொருத்தி அழகு பார்த்தார் சுந்தர்.சி. ‘அடி அனார்கலி’ ‘லவ்யூ லவ்யூ சொன்னாளே’ உள்ளிட்ட இதர பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் படத்திற்கு கூடுதல் சுவையை இணைத்தன. செந்தில்குமாரின் காமிரா ஊட்டியின் அழகை படம் முழுக்க சிறப்பாக பதிவு செய்திருந்தது.

உள்ளத்தை அள்ளித்தா

கதை, பாடல்கள், காட்சிகள் என்று அனைத்தும் நகலெடுக்கப்பட்டதாக இருந்தாலும் அவற்றைப் பொருத்தமாக இடங்களில் வைத்து ஒரு திரைக்கதை மேஜிக்கை சுந்தர்.சி ஏற்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். லாஜிக் இல்லாத காமெடியாக இருந்தாலும் படம் ஒரு இடத்தில் கூட சோம்பலாக அமராமல் நகர்ந்து கொண்டேயிருந்தது.

கார்த்திக் + கவுண்டமணியின் நகைச்சுவை, மணிவண்ணனின் தனி ராஜாங்கம், ரம்பாவின் வசீகரம், சிற்பியின் பாடல்கள், சுந்தர்.சியின் திறமையான இயக்கம் போன்ற காரணங்களால் இன்றும் கூட ரசித்துப் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது ‘உள்ளத்தை அள்ளித்தா’. என்னவொன்று ஒரிஜினல் ஐடியாவில் அமைந்த திரைப்படமாக இருந்திருந்தால் உண்மையிலேயே உள்ளத்தை அள்ளித் தந்திருக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.