லக்னோ: சனாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உதயநிதியின் கருத்துக்கு காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆதரவுதெரிவித்தார். ‘‘சக மனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத எந்த மதமும் நோயை போன்றது. தான் நினைக்கும் கருத்தை சொல்ல உதயநிதிக்கு முழுஉரிமை உள்ளது’’ என பிரியங்க் கார்கே கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஹர்ஷ்குப்தா, ராம்சிங் லோதி ஆகியோர் புகார் கொடுத்தனர்.
இதன்பேரில், உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே ஆகிய 2 பேர் மீதும் உத்தர பிரதேச போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் 295-ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுதல்), 153-ஏ (வெவ்வேறு மதக் குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.