சென்டிமென்ட் காட்டிய துரைமுருகன் முதல் வாரிசுக்குப் பொறுப்பு வாங்கிய அப்பாவு வரை | கழுகார் அப்டேட்ஸ்

மதுரை மாநாட்டில் புளியோதரையால் சர்ச்சைக்குள்ளான முன்னாள் அமைச்சர் அவர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவர்மீது சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. ‘பினாமி’ பெயரில் நிலம் வாங்கி, டெல்டா மாவட்டத்தில் அவர் கட்டிய மருத்துவமனைதான் அவரை மாட்டவைத்த சொத்தாம். வழக்கிலிருந்து விடுபடுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, அந்த மருத்துவமனை வளாகத்திலிருக்கும் ‘கலங்காமல் காக்கும் விநாயகர்’ கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார் மாஜி அமைச்சர். கூடவே, தன் வாரிசுக்கு நெருக்கமான இன்றைய வாரிசு அமைச்சர் மூலம், ஆளும் தரப்பையும் சரிக்கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

சபாநாயகர் அப்பாவுக்கும், முன்னாள் சபாநாயகரும், மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பனுக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த விஷயம். அரசியலில் ஆர்வம் காட்டிவரும் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் கட்சிப் பதவிக்கு முயன்றபோது, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் முட்டுக்கட்டை போட்டுவந்தாராம். இதனால் நேரடியாக கட்சித் தலைமையைச் சந்தித்த அப்பாவு, தன்னுடைய மகன் அலெக்ஸுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொறுப்பு வாங்கியிருக்கிறார்.

அப்பாவு

‘முரசொலி’யைப் பார்த்துத்தான் மா.செ ஆவுடையப்பனுக்கு இந்த விவரமே தெரியுமாம். ‘நமக்கு மரியாதையே இல்லை…’ என்று தன் ஆதரவாளர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் ஆவுடையப்பன்.

எடப்பாடி தரப்பின் மதுரை மாநாடு வெற்றியும், ஓ.பி.எஸ் தரப்பின் புரட்சிப் பயண அறிவிப்பு ரத்தும் பன்னீர் ஆதரவாளர்களை யோசிக்கவைத்திருக்கின்றன. “தென்மாவட்டத்தைக் காட்டியே அ.தி.மு.க-வைக் கதிகலங்க வைத்துவிடுவார். வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியும் சமரசப் பேச்சுக்கு இறங்கி வருவார்” என்று எதிர்பார்த்த பலரும் இப்போது, ‘அவரை நம்பி வீணாப்போனது போதும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

பன்னீர்

குறிப்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சிட்டிங் எம்.எல்.ஏ ஆகியோர் எடப்பாடி பக்கம் இடப்பெயர நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். ஓ.பி.எஸ் மதுரைக்கு வரும்போதெல்லாம் விமான நிலையத்தில் வரவேற்கக் கூட்டம் கூட்டியே கைக்காசை இழந்த இவர்களுக்கு, ஓ.பி.எஸ் தரப்பு ‘நிவாரணம்’ வழங்காததும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தென்மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் பல அமைச்சர்களின் தலை உருண்டிருக்கிறது. இது தெரியாமல் இவரும் உதவியாளருக்கு ஓவராக இடம் கொடுக்கிறாரே…” என முணுமுணுக்கிறார்கள் மஞ்சள் மாநகர் உடன்பிறப்புகள்.

தி.மு.க-வின் 75-வது ஆண்டு பவள விழாவை, பெரியார் பிறந்தநாளான வரும் 17-ம் தேதி வேலூரில் கொண்டாடத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ‘இந்த விழா, வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்’ என்றும் முழங்கியிருக்கிறார் ஸ்டாலின். இந்த முறை வேலூரைத் தேர்வுசெய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். “என் வாழ்நாளையே திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக அர்ப்பணித்துவிட்டேன்.

துரைமுருகன், ஸ்டாலின்.

கடைசி கட்டத்தில், உங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முப்பெரும் விழாவை, நான் பொதுச்செயலாளராக இருக்கும் இந்த நேரத்தில் கோட்டை மாநகரமான என் ஊரில்தான் நடத்த வேண்டும்” என சென்டிமென்ட்டாகப் பேசி, ஸ்டாலினை ஓ.கே சொல்ல வைத்துவிட்டாராம் துரைமுருகன். “விழாவை பிரமாண்டமாக நடத்தி, எப்படியும் மகனுக்கு மறுபடியும் சீட்டை கன்ஃபார்ம் பண்ணிடுவார்” என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.