புதுடில்லி,வாயு கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படும், ‘டைஜீன் ஜெல்’ என்ற, ‘டானிக்’ குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, கடைகளில் உள்ள மருந்துகளை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற துவங்கி உள்ளது.
வாயு கோளாறு, வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட கோளாறுகளுக்கு, ‘டைஜீன்’ என்ற மருந்து பயன்பாட்டில் உள்ளது.
இது, ‘டைஜீன் ஜெல்’ என்ற பெயரில், ‘டானிக்’ வடிவிலும், மாத்திரைகளாகவும் விற்கப்படுகின்றன.
இந்த மருந்தை, ‘அபாட்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோவாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த மருந்து, ‘பிங்க்’ நிறத்தில் இனிப்பு சுவை உடையதாக இருக்கும்.
கடந்த மாத துவக்கத்தில் வாங்கிய, ‘டைஜீன் ஜெல் டானிக்’ மருந்து, வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும், அதில் கசப்பு சுவையுடன் ஒருவித கெட்ட வாடை வீசியதாகவும் பயனாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த மருந்துகளை சந்தையில் இருந்து திரும்ப பெறும்படி, சி.டி.எஸ்., எனப்படும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.
‘இந்த மருந்து பயனாளர்களுக்கு பாதுகாப்பு அற்றதாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டு உள்ளது.
டாக்டர்கள் தரப்பு கூறும் போது, ‘மக்கள் பீதி அடைய தேவையில்லை. டாக்டர்கள் பரிந்துரையின்றி தானாகவே மருந்து கடைகளில் இந்த மருந்தை வாங்கி நீண்ட நாட்களாக உட்கொண்டு வருவோர், டாக்டரின் ஆலோசனையை பெறுவது அவசியம். மற்றபடி, ‘டைஜீன்’ மாத்திரைகளில் ஆபத்து இல்லை’ என, தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement