திருமலை – திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவின் ‘முதல்’ ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாகர் ரெட்டி, ‘‘இந்து கலாசார மரபுகளை உலகமயமாக்கல் திட்டத்தின்கீழ், ராம கோடி (ராம் ராம் என கோடி முறை எழுதுவது) எழுதுவதைப்போல், கோவிந்த கோடி நாமம் எழுதுவது ஊக்குவிக்கப்படும். 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ நாமம் எழுதிவந்தால், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வி.ஐ.பி தரிசன வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

10,01,116 முறை எழுதி வருபவர்களுக்கு (ஒருவருக்கு மட்டும்) வி.ஐ.பி தரிசனம் பெற ஏற்பாடு செய்யப்படும். பாரம்பர்ய வழக்கங்களை இளைய தலைமுறையினருக்குக் கொண்டுச்சேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆந்திர மாநிலத்தில், எல்.கே.ஜி முதல் பி.ஜி வரை படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதிக்கும் நோக்கத்தில் பகவத் கீதையில் இருக்கும் ஆன்மிக பக்திச் சிந்தனை, மனித நேயத்தை வளர்க்கும் கருத்துக்கொண்ட 20 பக்க புத்தகம், ‘புத்தகப் பிரசாதமாக’ விநியோகிக்கப்படும். மொத்தம் 1 கோடி புத்தகங்கள் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர், அக்டோபரில்) இரண்டு பிரம்மோற்சவம் வருகிறது. அப்போது, கூட்டம் அதிகமிருக்கும் என்பதால் பக்தர்கள் அதிகநேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரம்மோற்சவத்தின் வாகன சேவைகள் மிகச்சிறப்பாக நடத்தப்படும். கொடியேற்றம் நடைபெறும் 18-ம் தேதி முதலமைச்சர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்பிக்கவிருக்கிறார். அன்றைய தினமே 2024 ஆண்டுக்கான தேவஸ்தானத்தின் புதிய காலண்டர் மற்றும் டைரிகள் வெளியிடப்படும். தேவஸ்தானத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான 413 பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் 1952-ம் ஆண்டு பக்தர்களுக்காக கட்டப்பட்ட பழைமையான 2, 3 சத்திரங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் ரூ.600 கோடியில் 20,000 பக்தர்கள் தங்கும் விதமாக ‘அச்சுதம், ஸ்ரீபாதம்’ என இரண்டு ஓய்வறைகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கட்டப்படும்’’ என்றார். முன்னதாக இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் ‘சனாதனம்’ தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கருணாகர் ரெட்டி இதுபற்றிப் பேசுகையில், ‘‘சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அறங்காவலர் குழுத் தலைவராக மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவராகவும் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நபராகவும் கண்டனம் தெரிவிக்கிறேன். சாதி, மத, அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவதற்கும், சமூகத்தில் அமைதியின்மை கொண்டுவருதற்கும் நினைப்பவர்கள்தான் சனாதன தர்மம் குறித்து இப்படிப் பேசுவார்கள்’’ என்றார் காட்டமாக!
இந்த நிலையில் கோடி நாமம் எழுதி குடும்பத்தோடு விஐபி தரிசனம் பார்ப்பது சாத்தியமா என்று பக்தர் ஒருவரிடம் கேட்டோம்.
“கோவிந்தா நாமம் சொல்வதும் எழுதுவதும் புண்ணியம். எவ்வளவுக்கு எவ்வளவு சொல்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த நிலையில் தேவஸ்தானம் ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதினால் சாதாரண மக்களுக்கும் விஐபி தரிசனம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிந்த நாமம் ஒருமுறை எழுத 1 லிருந்து 2 நொடி ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு மணி நேரத்தில் 3600 முறை எழுதமுடியும். 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் என்றால் அவர்கள் பாடங்கள் படித்ததுபோல ஒருமணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ ஒதுக்கி எழுதமுடியும். அப்படி எழுதினாலும் 1 கோடி எழுதி முடிக்க நிச்சயம் பல பத்தாண்டுகள் ஆகிவிடும்.

எனவே திருமலை தேவஸ்தானம் ஒருகோடி நாமம் என்னும் இலக்கைக் குறைத்தால் பலரும் பயன்பெறுவார்கள். பத்துலட்சத்தில் ஆயிரத்தி நூத்திப்பதினாறுமுறை மட்டுமே எழுதிவந்தால் ஒருவருக்கு மட்டும் விஐபி தரிசனம் பார்க்க அனுமதி என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஒருவர் ஆண்டுமுழுவதும் கோவிந்த நாமம் எழுதுவதை மட்டுமே செய்துவந்தால் விரைவில் 10 லட்சம் எழுதிவிடலாம். மற்றபடி தினம் ஒருமணி நேரம் எழுதினால் அதற்கும் இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
திருமலை திருப்பதியில் ஶ்ரீவாரி ட்ரஸ்டுக்கு 10000 ரூபாய் செலுத்தினாலே விஐபி தரிசனம் தரும் நடைமுறை உள்ளது. அப்படியிருக்கையில் ஒருகோடிமுறை எழுதி தரிசனம் பார்ப்பது என்பது மிகவும் கடினமான இலக்கு. ஒருகோடி முறை கோவிந்த நாமம் எழுதுவது புண்ணியமே. ஆனால் அதை விஜபி தரிசனத்துக்கு இலக்காக தேவஸ்தானம் நிர்ணயிப்பது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை” என்றார்.