சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, `வேறு நீதிபதிதான் விசாரிக்க முடியும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை வாதிட்டிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியிருப்பதால், வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையைச் சேர்த்து, விளக்கத்தைக் கேட்டிருக்க வேண்டும்” என்றார்.
மேலும், “தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததைக் கருத்தில் கொள்ளாமல் முன் முடிவெடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்க வேண்டும். எந்த நீதிபதி விசாரிப்பது என தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால், இந்த விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் முன் வைத்த வாதத்தையே வலியுறுத்தினார். மேலும் அவர், “வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்ற நிர்வாக முடிவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து எடுத்த வழக்கை, தானே விசாரிப்பதா… அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து, அடுத்த வாரம் முடிவெடுப்பதாகக் கூறி, விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY