மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் அவரது அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என்பதை அமைச்சர் இதன்போது தெளிவாக எடுத்துரைத்தார்.

அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்து பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.