வடமாநிலச் சிறுமியைக் கடத்தி சிறார் வதை செய்த நபர்; கொலைசெய்ய முயன்றபோது தடுத்த மக்கள்- கேரளா `பகீர்'

கேரள மாநிலம், ஆலுவா சாத்தன்புறம் பகுதியில் இன்று அதிகாலை பெண் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் வெளியே சென்று பார்த்தபோது, ஒருவர் சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஓடுவதைக் கண்டனர். அதையடுத்து, பகுதி மக்கள் துரத்தியதால் குழந்தையை பக்கத்திலுள்ள வயல்வெளியில் வீசிவிட்டு, அந்த நபர் தப்பியோடியிருக்கிறார். மக்கள் அருகில் சென்று பார்த்தபோது, குழந்தை நிர்வாணமாக ரத்தக் காயங்களுடன் அழுதுகொண்டிருந்தது. உடனே குழந்தையை மீட்டவர்கள், ஆடை அணிவித்திருக்கின்றனர். அப்போது குழந்தை இந்தியில் பேசியதைத் தொடர்ந்து, வடமாநிலத் தொழிலாளியின் குழந்தையாக இருக்கலாம் எனக் கருதிய மக்கள், அருகில் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு குழந்தையை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

சிறார் வதை

அங்கு குழந்தை ஒரு வீட்டைக் காட்டியிருக்கிறது. அங்கு இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் இருந்திருக்கிறார். அவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி விசாரித்திருக்கின்றனர்.

அந்தப் பெண் தான் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்தன.

அந்தப் பெண்ணின் கணவர் நேற்றைய தினம் வேலை விஷயமாக திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கிறார். அதனால் மூன்று பிள்ளைகளுடன் அந்தப் பெண் தன்னுடைய வீட்டில் உறங்கியிருக்கிறார். அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சிறுமியைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். காலையில் எழுந்து பார்த்த அந்தப் பெண், தன்னுடைய மகளைக் காணாமல் பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால், எங்கும் கிடைக்காததால் செய்வதறியாமல் இருந்திருக்கிறார்.

ஆற்றில் குதித்த கிறிஸ்டின் ராஜைக் கைதுசெய்த போலீஸ்

சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீஸார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி சிறார் வதை செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்குச் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது திருவனந்தபுரம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் ராஜ் என்பவர்தான் சிறுமியைத் தூக்கிச் சென்று சிறார் வதை செய்து, பின்னர் கொலைசெய்ய முயன்றது தெரியவந்தது. அதையடுத்து, பெரியாற்றின் குறுக்கே உள்ள மார்த்தாண்டவர்மா பாலத்தின் அடிப்பகுதியில் பதுங்கியிருந்த கிறிஸ்டின் ராஜை மஃப்டியில் இருந்த போலீஸார் பிடிக்க முயன்றனர். உடனே அவர் ஆற்றில் குதித்துவிட்டார். அதையடுத்து போலீஸார் ஆற்றில் குதித்து, கிறிஸ்டின் ராஜைக் கைதுசெய்தனர்.

மன நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பல கொள்ளை வழக்குகளில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் கிறிஸ்டின் ராஜ். 18 வயது முதல் செல்போன் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கிறார். பகல் சமயத்தில் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் கிறிஸ்டின் ராஜ், இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறி அதிகாலையில் மீண்டும் வீட்டுக்குச் செல்வாராம். இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அவர் வீட்டைவிட்டு வெளியேறி, ஆலுவா பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து வசிக்கத்தொடங்கியிருக்கிறார். அங்கு தனது பெயரை சதீஸ் என மாற்றியிருக்கிறார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நள்ளிரவு 12 மணிக்கு பீகாரைச் சேர்ந்த நபரின் வீட்டுக்குச் சென்றதாகவும், வீட்டிலிருந்து செல்போன் உள்ளிட்டவற்றைத் திருடியதுடன், சிறுமியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று சிறார் வதை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். பின்னர் சிறுமியைக் கொலைசெய்யும் நோக்கில் தூக்கிச் சென்றபோது, பொதுமக்கள் பார்த்ததால் வீசிவிட்டுச் சென்றதாகவும் கூறியிருக்கிறார். கிறிஸ்டின் ராஜின் அறையில் போலீஸார் சோதனையிட்டபோது, செல்போன்கள் குவியலாகக் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

சிறார் வதை வழக்கில் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டின் ராஜ்

பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும், முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் ஆலுவா பகுதியில் வசித்துவந்த பீகார் தம்பதியின் 5 வயது மகளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்து சிறார் வதை செய்த பின்னர், கொலைசெய்து சாக்குமூட்டையில் கட்டி ஆலுவா மார்க்கெட் பகுதியில் வீசிச்சென்ற சம்பவம் நடந்தது. அந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த அஸ்பாக் ஆலம் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீகார் தம்பதியின் 8 வயது குழந்தை சிறார் வதை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.