சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சாமியார் ஒருவர் இன்னும் ஒருபடி மேலாக, உதயநிதி தலையை சீவி கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தன் மீதான அவதூறுகள், கொலை மிரட்டல்களுக்கு எதிராக உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கழகத் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் நான் பேசிய பேச்சை `இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து, அதையே மக்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார் யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்து கொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால் இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால் பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். “எப்போது ஒரு மதம், மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தைக் கற்பிக்கிறதோ அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை இழிவு படுத்துகிறதோ, அவர்களுக்குத் தீண்டாமையையும், அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்து கொள்ள விரும்பாமல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோ-வை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்திருக்கிறார். இடையே பணத்தை மதிப்பிழக்க செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளை கொடிக்கு வேலை வைப்பது என நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்.
ஒன்றிய பிரதமர் மோடி, கொரோனா நிதியாக திரட்டிய பி.எம்.கேர்ஸ்-க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி கேள்விக்கு பதில் அளிக்காமல், ஊரில் இருந்தால் மணிப்பூர் பற்றி கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால் மக்களின் அறியாமை தான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தை தூண்டி விட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் போன்றவற்றை திசை திருப்பதான் மோடி அண்ட் கோ இப்படி கம்பு சுற்றிக்கொண்டு இருக்கிறது. இன்னொருபக்கம், எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரி, நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. சாமியாரின் மீது வழக்கு போடுவது உருவ பொம்மையை எரிப்பது போன்ற நேரத்தை வீணடிக்க கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY