அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் பலரும் கலந்துகொண்டு பல தலைப்புகளில் பேசினர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து முன் வைத்த கருத்துகள் பேசுபொருளாகியது. நேற்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்த கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் பா. ரஞ்சித் உதயநிதிக்கு ஆதரவாக பேசியிருந்தார். தற்போது இயக்குநர் வெற்றிமாறனும் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் ஸ்டூடியோ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வெற்றிமாறன், “சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் கேள்விகள் எதுவும் இல்லை. பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலை விரும்பும் மனிதர்களாகிய நம் அனைவரது கடமை. அதைப் பற்றி பேசி இருக்கக்கூடிய உதயநிதியுடன் நாம் அனைவரும் உடன் நிற்க வேண்டும்.
நானும் அவருக்கு என்னுடைய ஆதரவைத் தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்களிலிருந்து, அதற்கான விடுதலை என்பது வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். பிறகு இந்தியா பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலிளித்த அவர், “ இந்தியா என்கிற பெயரை போதுமானதாக உள்ளது. அதுவே சரியானதாகவும் இருக்கிறது” என்றார்.
ஜெய் பீம், சார்பட்டா படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,” தேசிய விருது பற்றி எனக்கு வேறு ஒரு கருத்து உள்ளது. மற்றவர்கள் பேசுவதில் இருந்து எனக்கு வேறு விதமான கருத்து இருக்கிறது. நம்முடைய படத்தை ஒரு விதமான தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வு குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டு படத்தை அனுப்புகிறோம். அந்தப் படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம்.
அந்தப் படத்துக்கு விருது கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வு குழுவின் முடிவு. அந்த தேர்வு குழுவின் முடிவு நிச்சயமாக படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிப்பதில்லை. குறிப்பாக ‘ஜெய்பீம்’ மாதிரியான ஒரு படம் வந்தபிறகு சம்பந்தபட்ட சமூகத்தினருக்கு மாற்றங்கள் நடந்துள்ளது.
அந்தப்படம் என்ன செய்யவேண்டும் என அவர்கள் எடுத்தார்களோ அதை நிகழ்த்திவிட்டது. விருது என்பது கூடுதல் அங்கீகாரம். ஒரு படத்தின் தரத்தை தேர்வுக்குழுவின் தேர்வு தீர்மானிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து “என்று தெரிவித்திருக்கிறார்.