அதிர்ச்சி, ஏற்க முடியவில்லை : மாரிமுத்து மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து அசத்திய அவரின் மறைவு செய்தி வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.
சசிகுமார்
மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
சாந்தனு
மாரிமுத்துவின் மரணம் குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியானேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
அருண் விஜய்
மாரிமுத்துவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா அமைதியாக உறங்கட்டும்.
எதிர்நீச்சல் திருச்செல்வம்
மாரிமுத்துவின் மரணத்தை கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை. டப்பிங் முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருகிறேன் என சொன்னார். அவரின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் போய் இப்படி ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எங்களின் எதிர்நீச்சல் சீரியலுக்கும் பெரிய இழப்பு என்றார்.
பிரசன்னா
நானும் அவரும் கண்ணும் கண்ணும், புலிவால் படங்களில் இணைந்து பணியாற்றினோம். அண்ணன் – தம்பி போன்ற உறவு எங்களுக்குள் இருந்தது. அவரது வாழ்க்கை அவ்வளவு சுலபமானது அல்ல. ஒரு நடிகராக முன்னேறி வந்தார். இன்னும் கொஞ்சகாலம் இருந்திருக்கலாம் என்றார்.
சுசீந்திரன்
மாரி முத்துவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. ஜீவா படத்தில் அவருடன் இணைந்து வேலை செய்துள்ளேன். சிறந்த நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்சன் திலீப்குமார்
உங்களுடன் பணிபுரிந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன் மாரிமுத்து சார். உங்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
மாரி செல்வராஜ்
மாரிமுத்து அண்ணனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலையில் எழும்போதே இப்படி ஒரு சோகமான செய்தி. எனது முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தார். சினிமா, இலக்கியம் என நிறைய பேசி உள்ளோம். அவருடன் விரைவில் ஒரு படம் பண்ண எண்ணியிருந்தேன். அது அவருக்கும் தெரியும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயநிதி
திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.