வாஷிங்டன்,
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.
இதுகுறித்து நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மர்மகும்பலுக்கு வலைவீசி தேடியது. இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கடந்த ஜனவரி 2022 முதல் இந்தாண்டு தொடக்கம் வரை 20-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிந்தது. இதுகுறித்து 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள், கார்கள், நவீன ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருடிய நகைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.