சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி, 31 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள 10.32 ஏக்கர் அரசு நிலம் 1922-ம் ஆண்டு ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலக் கட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, கிளப் நிர்வாகத்தால் பாக்கி வைக்கப்பட்டிருந்த தொகையை செலுத்துமாறு முதல்முறையாக தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு ஒருமுறை குத்தகை தொகை மாற்றியமைக்கப்பட்டது தொடர்பாகவும் தாசில்தார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த நிலத்துக்கான குத்தகை தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டு தங்களுக்கு குத்தகைக்ககு விடப்பட்டது. அரசால் குத்தகை விடப்பட்ட நிலையில் பாக்கி தொகையை செலுத்தக்கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்ப முடியாது. எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிலத்தின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தக்கோரிதான் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இருப்பினும் அந்த தொகையை செலுத்த கிளப் நிர்வாகம் மறுத்து விட்டது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குத்தகை பாக்கியை செலுத்தக் கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதில் தவறில்லை. மேலும், நடப்பாண்டு ஜூன் மாதம் வரை பாக்கி வைத்திருக்கக் கூடிய 31 கோடியே 16 லட்சத்து 65ஆயிரத்து 786 ரூபாயை, கிளப் நிர்வாகம் ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும். பாக்கி தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் உடனடியாக கிளப்பை அப்புறப்படுத்தி, தொகையை வசூலிக்க உத்தரவிட்ட நீதிபதி, அந்த நிலத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.