ஜகார்த்தா,-‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள, 10 நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் உட்பட, பல விஷயங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, 12 அம்ச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
ஆசியான் – இந்தியா 20வது கூட்டம், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்தது. இதில், ஆசியான் அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, நம் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையே மிகவும் நெருங்கிய நட்பு உள்ளது. இதன், 20வது மாநாடு வெற்றிகரமாக நடந்தது.
ஒத்துழைப்பு
ஆசியான் நாடுகளுடன், டிஜிட்டல் பரிவர்த்தனை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதற்காக அவர், 12 அம்ச திட்டங்களை முன்வைத்தார். இந்தக் கூட்டத்தில், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக இரண்டு கூட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், ஆசியான் நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவது தொடர்பாக பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஆசியான் – இந்தியா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான ஆய்வுகளை கால நிர்ணயம் செய்து மிக விரைவில் முடிக்கவும் மோடி வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்கும் வகையில், பொருளாதார பாதையை உருவாக்குவது உட்பட, 12 அம்சங்களை மோடி முன்வைத்துஉள்ளார்.
பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி, சைபர் பொய் தகவல் பரப்புதல் ஆகியவற்றை கூட்டாக எதிர்கொள்வது குறித்தும் அவர் விவரித்தார்.
வலியுறுத்தல்
உலக சுகாதார அமைப்பின் வாயிலாக, இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தில் இணையும்படியும், ஆசியான் நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பேரிடர் மேலாண்மை, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, 18வது கிழக்கு ஆசிய மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசியான் மாநாட்டின்போது, தைமூர் லெஸ்டேயின் டிலியில், இந்திய தூதரகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
‘இணைந்து செயல்படுவோம்!’
ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், மிகவும் முக்கியமான இடத்தில், 10 ஆசியான் நாடுகளும் உள்ளன. சர்வதேச வளர்ச்சியில் இந்த நாடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நாடுகளுடன் தோளோடு தோள் சேர்த்து செயல்பட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. 21ம் நுாற்றாண்டு ஆசியாவின் நுாற்றாண்டாக இருக்கப் போகிறது. அதனால், மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்து, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ‘குளோபல் சவுத்’ எனப்படும் பூமியின் தென் பகுதியில் உள்ள நாடுகளின் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும். இதற்கு இந்த நாடுகளின் முழு ஆதரவு தேவை.’வசுதைவ குடும்பகம்’ எனப்படும் இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதனால் தான், ஜி – 20 மாநாட்டின் மையப் பொருளாக, ஒரு நாடு, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்று குறிப்பிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து நடந்த கிழக்காசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:நாடுகளின் எல்லை, இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இதில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவோம். சர்வதேச விதிகள் மற்றும் ஐ.நா., ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடல் பகுதிகளில் அனைவருக்கும் உரிமை கிடைப்பதை உறுதி செய்வோம். ஒரு சில நாடுகள், கடல் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க நினைப்பதை முறியடிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்