செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை அமைப்புகளை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாடாளுமன்றத்துக் குள்ளேயே எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ‘உங்கள் வீட்டுக்கு இ.டி ரெய்டு வரும்’ என்று பா.ஜ.க-வினர் மிரட்டுவதே சாட்சி. அதானியின் ஊழலைப் பற்றிப் பேசிவிடுவாரே என்று அவசர அவசரமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்த கூட்டம்தான் இது. என்னைக் கேட்டால், மத்திய பா.ஜ.க அரசை, `சர்வாதிகார அரசு’ என்றுகூடச் சொல்ல முடியாது. அதைவிடக் கேவலமாக, சொந்த நாட்டு மக்களையே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரித்தாண்டு ரத்தம் குடிக்கிற அரசு இது. இப்போது எந்த முன்னறிவிப்பும், விவாதமும், கருத்துக்கேட்புமின்றி நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்கிற கடுப்பில், நாட்டின் பெயரையே மாற்றிய கோமாளிக் கூட்டத்தை உலகம் இப்போதுதான் பார்க்கிறது. இருள் அதிகரித்துக்கொண்டே போனால் விரைவில் விடியல் ஆரம்பமாகப்போகிறது என்று அர்த்தம். இந்தச் சர்வாதிகாரக் கூட்டத்தை வரும் தேர்தலில் மக்கள் மொத்தமாகத் துடைத்தெறிவார்கள்.”
வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க
“ஒற்றை நீதிமன்றத் தீர்ப்பைச் சகித்துக்கொள்ள முடியாமல், நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த கூட்டமெல்லாம் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே ஒற்றைக் குடும்பத்தின் சர்வாதிகாரப் பிடியில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார் கார்கே. தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் ஒரு ஜனநாயக அரசின் முதல் கடமை. அதை மக்களால் அடியோடு புறக்கணிக்கப்பட்ட கட்சியால் சகித்துக்கொள்ள முடியாமல், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறது. மடியில் கனமில்லை என்றால், அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளைப் பார்த்து எதற்கு பயப்படு கிறார்கள் எதிர்க்கட்சியினர்… காலனி ஆதிக்கச் சுவடுகளை நீக்கவும், அந்த மனப்பான்மையிலிருந்து நாட்டை மீட்கவும் பா.ஜ.க அரசு தொடர்ந்து பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் அதன் தொடக்கம். ‘பாரத்’ என்பது ஒன்றும் புதிதாக நாங்கள் வைத்த பெயர் கிடையாது… அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் பெயர்தான். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தியவர்கள் ‘பாரத்’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு தோல்விக் கூட்டணியைக் கட்டியமைத்து, பயத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்.”