Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-வில் நேபாளம் அணியும், குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான் அணியும் வெளியேற பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில், முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான ரேஸில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, இரண்டாவது சூப்பர்-4 போட்டி நாளை (செப். 9) நடைபெறுகிறது. இதில், இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரும் செப். 10ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே, குரூப் சுற்றில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், 266 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி ஒரு பந்து கூட வீசாமல் போட்டி முடிவு இன்றி ரத்து செய்யப்பட்டது.
அன்றைய போட்டி மழையால் ரத்தானது பெரிதும் ஏமாற்றத்தை அளித்த நிலையில், வரும் செப். 10ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இலங்கை கொழும்புவில் நடைபெற உள்ளது. அங்கும் போட்டி நாள் அன்று மழைக்கு 90 சதவீதத்திற்கும் மேல் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால், இந்த போட்டியும் ரத்தானால் மிகவும் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றுவது குறித்தும், ரிசர்வ் டே குறித்தும் பிசிசிஐ தரப்பில் ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,”ஆசியா கோப்பை 2023 தொடருக்கான சூப்பர்- இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதற்கு ரிசர்வ் டே அனுமதிக்கப்படுகிறது. பாதகமான வானிலை காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா போட்டியின் போது இடைநிறுத்தப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது மற்ற சூப்பர்-4 போட்டிகளுக்கு இல்லை என்றும், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி செப். 10ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், 12ஆம் தேதியும் இலங்கை அணியுடனும், 15ஆம் தேதி வங்கதேச அணியுடனும் மோத உள்ளது. இறுதிப்போட்டி வரும் செப். 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அனைத்து போட்டிகளும் இலங்கை பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்தாண்டு ஆசிய கோப்பை தொடர் 20 ஓவர் வடிவில் நடைபெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டில் தான் கடைசியாக ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடைபெற்றது. அந்த ஆசிய கோப்பை பட்டத்தை இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கைப்பற்றியது. எனவே, 50 ஓவர் வடிவிலான ஆசிய கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. கூடவே, அடுத்தடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை தொடரும் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.