ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் சூப்பர் 4 கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கும் இறுதிப்போட்டிக்கும் மட்டும் ரிசர்வ் டே உண்டு என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் என 6 நாடுகள் ஆடிய இந்தத் தொடரின் முதல் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தானும் நேபாளும் வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் நான்கு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. இந்தத் தொடர் முழுவதுமே குறிப்பாக இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் மழை அடிக்கடி குறுக்கிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. பல்லகலேவில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி கூட மழையால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டிருந்தது. அதே மைதானத்தில் நேபாளத்திற்கு எதிராக இந்தியா ஆடிய போட்டியுமே மழையால் பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படியே இந்தியா அந்தப் போட்டியை வென்றது.
சூப்பர் 4 சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தன. இந்த 6 போட்டிகளுமே கொழும்புவிலேயே நடைபெறுவதாகவும் இருந்தது. வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான முதல் சூப்பர் 4 போட்டி நடந்தும் முடிந்துவிட்டது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவு இப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமதளத்தில் போட்டியை உறுதி செய்ய வேண்டியது கவுன்சிலின் கடமை. அப்படியிருக்க, ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுவது ஏன்? இந்த இடத்தில்தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அந்த முதல் போட்டி பாதிக்கப்பட்ட போதே கொழும்புவில் சூப்பர் 4-ஐ நடத்த வேண்டாம் என்கிற கோரிக்கைகள் எழுந்தது. லாகூர் அல்லது ஹம்பந்தோட்டாவுக்குப் போட்டிகளை மாற்றலாம் என ஆலோசனையும் வழங்கப்பட்டது.
எதையும் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இப்போது வேறு வழியே இல்லையெனும் போது வணிகத்தை மனதில் வைத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே உண்டென அறிவித்திருக்கிறார்கள். அத்தனை போட்டிகளுக்கும் ரிசர்வ் டே வரும் வகையில் அட்டவணையை மாற்றி அமைத்திருக்க வேண்டும் அல்லது எந்தப் போட்டிக்குமே ரிசர்வ் டே இருந்திருக்கக்கூடாது.
பணபலமிக்க அதிகாரமிக்க அசோசியேஷனாக இருப்பதால் இஷ்டத்திற்கு பாரபட்சமான நடவடிக்கைகளை எடுப்பது துளிக்கூட அறமற்றது என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.