“எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவரை மதிக்க அவர்களுக்கு தெரியவில்லை” – மத்திய அரசு மீது  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரசல்ஸ் (பெல்ஜியம்): “குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாததற்கு அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.

ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த நிலையில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். 60 சதவீத மக்கள் தொகையின் தலைவரை அவர்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்கு பின்னால் என்ன சிந்தனை இருக்கிறது?” என்றார்.

ராகுல்காந்தி மும்பையில் நடந்த இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் 60 சதவீதம் என்ற பதத்தினை பயன்படுத்தினார். அந்தச் சந்திப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் மேடையில் இருக்கும் போது, இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் 60 சதவீத மக்கள் தொகையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜி20 பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “ஜி20 ஒரு முக்கியமான உரையாடலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா அதனை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்றார். இந்தியாவில் அரசு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்ற தனது பேச்சை மீண்டும் அவர் வலியுறுத்தினார். மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மணிப்பூரில் ஜனநாயக உரிமைகள், நல்லிணக்கம், மக்களிடம் அமைதி நிலவவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள் மக்களை வழிநடத்தும் குழுவினரால் நடத்தப்படுகின்றன. இந்தியாவைப் பற்றிய சிறிதளவு புரிதல் உள்ள அனைவராலும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் போராட்டம் எங்களுக்கானது. நிறுவனங்களின் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவோம். எதிர்க்கட்சிகள் அதைச் செய்யும்” என்றார்.

பாரத் பெயர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, “அது ஒரு திசைமாற்றும் தந்திரம். நாங்கள் எங்கள் கூட்டணிக்கு (எதிர்க்கட்சிகளின்) இண்டியா என்று பெயர் வைத்தது ஒரு நல்ல சிந்தனை. ஏனெனில் அது நாங்கள் யார் என்பதை உணர்த்துகிறது. நாங்கள் எங்களை இந்தியாவின் குரலாக கருதுகிறோம். இது பிரதமர் மோடியை நாட்டின் பெயரை மாற்ற எண்ணும் அளவுக்கு பாதித்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அதானி மற்றும் க்ரோனி முதலாளித்துவம் பற்றி பேசும் போதும், பிரதமர் அதனை திசை திருப்பும் வகையில் ஒரு புதிய நாடகத்தினை நடத்துகிறார்” என்று ராகுல் பதில் அளித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த கேள்விக்கு,”நாட்டில் சிறுபான்மையினர் மட்டும் இல்லை, பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களும் பாகுபாட்டைச் சந்திக்கின்றனர். எங்கள் நாடு மாநிலங்களின் கூட்டிணைப்பு என்று அரசியலைப்பு விவரிக்கிறது. எங்கள் ஒற்றுமையின் முக்கிய அம்சமே அதன் உறுப்பினர்களுக்கு இடையேயான உரையாடல்களே என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பாஜகவின் பார்வையில் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டும், ஒருமுகப்படுத்தப்பட வேண்டும், வளங்கள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நம்புகிறது. இதனால் உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் நாட்டுமக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.