கழிவு நீரை அகற்றும் பணிக்கு ரூ.6 கோடியில் நவீன ரோபோ!| A modern robot at Rs 6 crore for waste water removal!

புதுச்சேரி மாநிலத்தில் நபருக்கு 135 லிட்டர் வீதம் தினசரி 119 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதற்கேற்ப குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், கழிவு நீர் அகற்ற நவீனமுறை திட்டமும் மாநிலத்தில் மேம்படுத்தவில்லை.

புதுச்சேரியில் தினசரி 57 எம்.எல்.டி., கழிவு நீர் உற்பத்தி ஆகிறது. இவற்றை சுத்தம் செய்து, கடலுக்கு அனுப்ப லாஸ்பேட்டை, கனகன் ஏரி மற்றும் திப்புராயப்பேட்டையில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் நகரில் உருவாகும் முழுமையான கழிவுநீரும் சுத்திகரித்து மாற்று திட்டத்திற்கு பயன்படுத்தவில்லை.

இதேபோல் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்கின்றனர். இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறப்பதும், நோய்வாய் படுவதும் தொடர்கிறது.
இதனை தவிர்க்க மாநிலத்தில் நவீன ரோபோக்களை கொண்டு கழிவு நீர் மேலாண்மை செய்ய பொது சுகாதார கோட்டம் முடிவு செய்துள்ளது.

இதற்கு கடனுதவி கேட்டு,தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்திற்கு கோப்பு அனுப்பியது. கோப்பை ஏற்றுக் கொண்ட தேசிய பணியாளர் ஆணையம், ரூ.6 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. எனவே மாநிலத்தில் கழிவு நீர் மேலாண்மை திட்டத்திற்கு விரைவில் நவீன ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

தற்போது பாதாள சாக்கடையின் மேன்ஹோலில் உள்ள கற்கள் உள்ளிட்ட அனைத்து கனமான பொருட்களை, சக்கர், ஜெட்டிங், ராடிங் வசதிகள் கொண்ட கழிவு நீர் லாரிகள் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகின்றது.
இருப்பினும் பாதாள சாக்கடையில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் உள்ளது. கழிவு அடைப்புகள் உள்ளது என்பதில் கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

latest tamil news

ரோபோக்களைபயன்படுத்தும்போது, இந்த சிக்கல் இருக்காது. அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் காமிராவுடன் கூடிய ரோபோக்கள்மேன் ஹோலில் முதலில் இறக்கப்பட்டதும், எவ்வளவு மணல், எவ்வளவு பரப்பளவிற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். இதன் மூலம் விரைவாகவும், மனிதர்கள் உதவி இல்லாமலும் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்ய முடியும்.

கழிவு நீர் அகற்றும் ரோபோக்களைதயாரிக்கும் நிறுவனங்களை தேசிய துப்புரவு பணியாளர் ஆணையமே பட்டியலிட்டுள்ளது. இந்த நிறுவனங்களை விரைவில் புதுச்சேரி அரசு அணுகி ரோபோக்களை வாங்கி, கழிவு நீர் மேலாண்மையில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

நேரம் மிச்சமாகும்

பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் கூறுகையில், கழிவு நீர் மேலாண்மையில் ரோபாட்டிக் இயந்திரங்களை புகுத்துவதன் மூலம், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும். விரைவாக கழிவு நீர் அடைப்பு நீக்கப்படுவதோடு, நேரமும் மிச்சமாகும். கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவது தடுக்கப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.