திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுங்க சாவடியில் அடுத்த வாரம் முதல் பாஸ்டேக், க்யூஆர் கோட் போன்ற புதிய வசூல் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நகராட்சி இறங்கியுள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வானங்களுக்கும் நகராட்சி சார்பில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ரொக்க முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் நகராட்சி சார்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, கொடைக்கானல் தாலுகா பகுதியில் வசிப்பவர்கள் உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்கு (பாஸ்) அனுமதி பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரொக்க முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, ‘பாஸ்டேக்’, ‘க்யூஆர் கோட்’ போன்ற புதிய வசூல் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நகராட்சி இறங்கியுள்ளது. இத்திட்டம் மூலம் 15 நிமிடத்தில் குறைந்தது 65 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல வழிவகை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறியதாவது: உள்ளூர் வாகனம் என்று கூறி பலரும் சுங்க கட்டணம் செலுத்துவதில்லை. இதனால் நகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கவும், சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் புதிய முறையில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பின்னர் முழுவதுமாக அமல்படுத்தப்படும். பாஸ்டேக், க்யூஆர் கோட் வசதி இல்லாத சுற்றுலா பயணிகள் ரொக்கமாகவும் சுங்க கட்டணம் செலுத்தலாம். இதுவரை 600 உள்ளூர் வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஸ் பெறாதவர்கள் நகராட்சியில் தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.