சேலம் | மரங்களுக்கு பூஜை செய்து பிறந்தநாள் கொண்டாடிய சமூக ஆர்வலர்

சேலம்: சேலம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய சமூக ஆர்வலரின் செயலை பலரும் பாராட்டினர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2010ம் ஆண்டு அரிமா சங்கத்தின் சார்பில் 23 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுதவிர ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 200 மரங்கள் வரை உள்ளன. மரக்கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு நன்கு வளர்ந்த மரங்களாக மாறி, மக்களுக்கு நிழல் தரும் இடமாக அமைந்துள்ளது. அரிமா சங்கத்தின் நிர்வாகியாக உள்ள சேகர், மரங்களை பேணி பாதுகாத்து, பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 223 மரங்கள் உள்ளன. இதில் மா, பலா, கொய்யா, வேப்பமரம், ஆலமரம், அத்திமரம், நாவல், என பல வகை மரங்கள் வளர்ந்துள்ளன. மரம் வைக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து சமூக அலுவலர் சேகர், தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மரங்களுக்கு பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இவரின் செயலை மக்கள் பலரும் பாராட்டினர்.

இது குறித்து அவர் கூறும் போது, ”கடந்த 14 ஆண்டுகளாக என் குழந்தையைப் போல பாவித்து மரங்களை காலை, மாலை இருவேளையும் பராமரித்து வருகின்றேன். பொதுமக்கள் மரங்களின் தன்மையும், அதன் பயன்களையும், முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். மரங்களின் இலைகளை கிள்ளுவதோ, கிளைகளை வெட்டுவதோ கூடாது. மரங்களைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் மனித குலம் ஆரோக்கியத்துடனும், இயற்கை வளத்துடன் செழித்தோங்கி வாழையடி வாழையாக தழைத்தோங்கும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இன்று நான் வளர்த்த மரங்களுடன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தேன்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.