சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கிட்டதட்ட நான்கு மாதங்களாக சிறையில் உள்ளார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இன்று அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. பின்னர் மீண்டும் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 120 பக்க குற்றப்பத்திரிக்கையும், 3000 பக்க ஆவணங்களையும் தாக்கல் செய்தது. அதன் நகல் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு செலுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமோ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை கை காட்டியது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாமா என்று விளக்கம் கேட்டுவர அறிவுறுத்தியது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வு செப்டம்பர் 4ஆம் தேதி விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார். எனவே விரைவில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும்.