டெல்லிக்கு வந்தடைந்தார் ஜோ பைடன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சற்று முன்பு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் அவர், இன்றிரவே பிரதமர் மோடியுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துகிறார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்!
தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த முறை ஜி20 அமைப்புக்குத் தலைமை தாங்கியிருக்கும் இந்தியா, மிகச் சிறப்பான முறையில் உச்சி மாநாட்டை நடத்தி முடிக்கத் திட்டமிட்டு, செயல்பட்டுவருகிறது.
டெல்லியில் பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் வாயில் முகப்பில் தமிழ்நாட்டின் சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றனர்.
நாளை மாநாடு தொடங்கவிருக்கும் நிலையில், டெல்லிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வரத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது. விழாக்கோலம் பூண்டிருக்கும் டெல்லியில், இந்த உச்சி மாநாட்டின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று காலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அவர் இன்று மாலை டெல்லிக்கு வருவார் எனக் கூறப்படுகிறது. அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லிக்கு விமானத்தில் வந்திறங்கினார்.
அவரைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா எனத் தொடர்ச்சியாக உலக நாடுகளின் தலைவர்கள் விரைந்துகொண்டிருக்கின்றனர்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு, பிரதமர் மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.