வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜி20 போன்ற மாநாடுகளில் இந்தியாவிற்கு மகத்தான வெற்றி கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை ஆதரிக்க ஆர்வமாக உள்ளேன் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்துள்ள ரிஷி சுனக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா பிரிட்டன் இடையே ஒரு விரிவான மற்றும் லட்சிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதை காண நானும் மோடியும் ஆர்வமாக உள்ளோம். இரு நாடுகளும் பணியாற்ற வேண்டி உள்ளதால் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சிறிது காலம் ஆகும். ஒப்பந்தம் போடுவதில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இன்னும் பணியாற்ற வேண்டி உள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதம் போன்ற பயங்கரவாதம் மற்றும் வன்முறையை பிரிட்டன் ஏற்றுக்கொள்ளாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறேன். காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து எடுத்து வருகிறோம். இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுடன் பேசி உள்ளார். உளவுத்துறை எச்சரிக்கை மற்றும் தகவல்களை பரிமாறி கொள்ள பேசி வருகிறோம். இதன் மூலம், பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.
உக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோதமாக படையெடுத்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை ஏறிவிட்டது. இது சரியானது அல்ல. ரஷ்யாவின் போர் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறேன்.
நான் பெருமைக்குரிய ஹிந்து. ஹிந்துவாக வளர்ந்தேன். அப்படியே உள்ளேன். அடுத்த ஓரிரு நாளில் கோயிலுக்கு செல்ல உள்ளேன். ரக்ஷா பந்தன் போது, ஏராளமான எனது உறவினர்கள் எனக்கு ராக்கி கயிறு கட்டினர். கிருஷ்ண ஜெயந்தியை முறையாக கொண்டாட நேரம் கிடைக்கவில்லை. ஆனால், நிச்சயம் கோயிலுக்கு செல்வேன் என நம்புகிறேன். நம்பிக்கை என்பது, வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உதவும். மன அழுத்த வேலைகள் இருக்கும் போது, உங்களுக்கு வலிமை கொடுப்பதற்கு நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம்.
ஜி20 மாநாட்டின் மையக்கருத்தாக வசுதேவ குடும்பகம் என்ற கருத்து இருப்பது மிகவும் சரியானது எனு நம்புகிறேன். எனது குடும்பம் உள்ள இடத்தில் பிரிட்டன் பிரதமராக வந்துஇருப்பது சிறப்பானதாக உள்ளது. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை உள்ளது. என் மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான அன்பை அவர் வைத்துள்ளார். நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்தியா பிரிட்டன் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட முயன்று வருகிறோம். இது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கும்.
ஜி20 போன்ற மாநாடுகளில் இந்தியாவிற்கு மகத்தான வெற்றி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் மோடியை ஆதரிக்க ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement