புதுடெல்லி: ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையான நிலையில், இந்த விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரத் குடியரசுத் தலைவர் என்பதைத் தொடர்ந்து நாட்டின் பெயரை மத்திய அரசு மாற்ற விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அரசை கடுமையாக விமர்சித்தன. அதன் தொடச்சியாக விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிகழ்வுக்கு முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், ஹெச்டி தேவகவுடா உள்ளிட்டோருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தன்னால் கலந்து கொள்ள இயலாது என தேவகவுடா தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங், தனது வருகை குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த விருந்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதிஷ் குமார் பாட்னாவில் இருந்து சனிக்கிழமை காலை 10.45-க்கு டெல்லி கிளம்ப இருக்கிறார்.
இந்த நிலையில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், விருந்துக்கு அழைக்கப்படவில்லை. இது இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “அவர்கள் எதிக்கட்சித் தலைவர்களை மதிக்கவில்லை என்பதை இது உங்களுக்கு காட்டும். அவர்கள் ஜி20 உச்சி மாநாட்டுக்கும் அழைக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்த விருந்துக்கு ராகுல் காந்தியும் அழைக்கப்படவில்லை. முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்துள்ளார். பாரத் என பெயர் மாற்றியதை அடுத்து அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. மம்தாவின் முடிவினை ஆளும் பாஜக வரவேற்றுள்ளது.
குடியரசு தலைவரின் விருந்து நிகழ்வு, 30 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சங்கு வடிவ அரங்கில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், நாடு ஊக்கப்படுத்தி வரும் சிறுதானியமான திணைக்கு சிறப்பு இடம் தரப்பட்டு, இந்திய உணவு வகைகள் இடம்பெற இருக்கின்றன. விருந்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களுக்காக, மூன்று மணி நேர செவ்வியல் மற்றும் தற்கால இசை நிகழ்வு நடைபெற உள்ளது. ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் பிகரதி மைதானத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.