கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் காலநிலை மாற்றக் குறியீடு ( Climate Shift Index ) அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இது உலகளவில் இந்த காலகட்டத்தில் பதிவான வெப்பநிலையில் மிக அதிகமானதாகும் என்று க்ளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘க்ளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு சுயாதீன விஞ்ஞானிகளின் கூட்டமைப்பாகும். இந்தக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மாறிவரும் காலநிலை குறித்தும் வெப்பநிலையில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பகிரும் சிஎஸ்ஐ (CSI) என்பது தினசரி வெப்பநிலையில் காலநிலை மாற்றத்தின் பங்களிப்பை அளவிடும் ஒரு முறையாகும்.
அண்மையில் ‘க்ளைமேட் சென்ட்ரல்’ குழு வெளியிட்ட அறிக்கையின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் அதாவது 800 கோடி பேர், பூமியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கார்பன் மாசுபாட்டால் வழக்கத்தைவிட இரு மடங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதை அனுபவித்துள்ளனர். இதனால் வரலாற்றில் இதுவே உலகளவில் மிக வெப்பமான கோடை காலமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தால் மூன்று இந்தியப் பகுதிகள் வழக்கத்தைவிட்டு 3 டிகிரி அல்லது அதற்கும் மேலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு இந்த வெப்பநிலை மாற்றம் நீடித்துள்ளது.
குறிப்பாக கேரளா, புதுச்சேரி மற்றும் நிகோபாரில் ஜூலை, ஆகஸ்ட் உள்ளடக்கிய 60 நாட்களுக்கு சிஎஸ்ஐ (க்ளைமேட் ஷிஃப்ட் இன்டெக்ஸ்) 3 டிகிரி உயர்ந்துள்ளது. இதுதவிர இந்தியாவின் 11 மாநிலங்களில் வழக்கத்தைவிட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை கால சராசரியைப் பொறுத்தவரை கேரளா, அந்தமான் மற்றும் நிகோபார், புதுச்சேரி, மேகாலயா, கோவா மாநிலங்களில் 3 டிகிரி அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் இந்த ஆண்டு அங்கு ஜூன் – ஆகஸ்டில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்தால் கேரளா தீவிர வறட்சியில் சிக்கும் சூழல் உள்ளது என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.
காலநிலை தாக்கம் பாரபட்சமின்றி அனைத்துப் பகுதி மக்களையும் பாதித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகளைவிட மிகக்குறைந்த அளவில் கார்பன் எமிஷன் பதிவு செய்யும் நாடுகளில் கூட வழக்கத்தைவிட மூன்று முதல் 4 மடங்கு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர். அதாவது 300 கோடி பேர் வழக்கத்தைவிட அதிக வெப்பத்தை அனுபவித்துள்ளனர். இதற்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றமே காரணமாக இருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் மிக மோசமான தாக்கங்களை அனுபவித்த நாடுகள் காற்று மாசுபாட்டுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. காலநிலை மாற்றத்துக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத 100 கோடிக்கும் மேற்பட்டோரும் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அன்றாடம் வெப்பநிலை அதிகரிப்பை உணர்ந்துள்ளனர்.
ஜி20 நாடுகளில் வசிப்பவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் காலகட்டத்தில் சராசரியாக 17 நாட்களுக்கு 3 டிகிரி வரை அதிகரித்த வெப்பநிலை தாக்கத்தை அனுபவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பவர்கள் சராசியாக 47 நாட்களும் சிறிய தீவுகள் மற்றும் வளரும் நாடுகளில் 65 நாட்களும் காலநிலை மாற்றக் குறியீட்டில் 3 டிகிரி அல்லது அதற்கும் மேற்பட்ட வெப்பநிலை உயர்வை அனுபவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.