திருமணமான அமமுக பிரமுகருடன் நட்பு?- இளம்பெண் தற்கொலை; சாலைமறியலால் ஸ்தம்பித்த வளவனூர்- நடந்தது என்ன?

விழுப்புரம் அருகேயுள்ள வளனூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனராம். அப்பகுதியின் அ.ம.மு.க நகரச் செயலாளராக இருந்து வரும் இவர், வளவனூர் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். மேலும், சொந்தமாக வாடகை பாத்திரக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். 2022-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் (தற்போது வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தக் கடையில் கணக்கு பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறார். இதனிடையே அந்தச் சிறுமியுடன் நெருங்கிப் பழகிய கந்தன், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல்ரீதியான சீண்டலிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சாலைமறியல்

இது சிறுமியின் வீட்டிற்குத் தெரியவரவே, அவரை வேலைக்கு செல்வதிலிருந்து நிறுத்தியுள்ளனர். பின்னர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டில் சிறுமியை தங்கவைத்து டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்த்துள்ளனர். ஆனால் நேரில் சென்றும், போன் மூலமாகவும் சிறுமியுடனான பழக்கத்தை கந்தன் தொடர்ந்து வந்ததோடு, பாலியல்ரீதியான தொந்தரவும் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள உறவினர் வீட்டில், தற்போது 18 வயதாகும் அந்த இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து சூளைமேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, “தங்கையுடனான செல்போன் குறித்த வாய் சண்டையில் கோபம் கொண்டு தவறுதலாக எலிபேஸ்ட் சாப்பிட்டுவிட்டேன்” என இளம்பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை கேள்வியுற்ற கந்தனின் உறவினரான விஜயன், “எங்க மாமாமீது புகார் ஏதும் கொடுக்கக் கூடாது” என்று இளம்பெண்ணின் பெற்றோரை மிரட்டினாராம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், 7-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பைத் தொடர்ந்து, கந்தன் மற்றும் அவரது உறவினர் விஜயன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படி வளவனூர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் தரப்பு நேற்று (07.09.2023) மதியம் புகார் அளித்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், இளம்பெண்ணின் உடல் நேற்று மாலை சொந்த ஊரான வளவனூருக்கு கொண்டு வரப்பட்டது. 

புகாரளித்த உறவினர்கள்

அப்போது வளவனூர் கடைவீதி பகுதியில் திரண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.. அவரின் இறப்புக்கு காரணமான கந்தனைக் கைதுசெய்ய வலியுறுத்தி, ஆம்புலன்ஸில் உடலை வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் – புதுச்சேரி இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் போலீஸார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், உடன்பாடு ஏட்டப்படாமல் போனது. எனவே, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற விழுப்புரம் எஸ்.பி சசாங் சாய், “உங்கள் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

கந்தன்

இது குறித்து கேள்வியுற்ற கந்தன், போலீஸார் எங்கே கைதுசெய்து விடுவார்களோ என்று பயத்தில் விஷம் அருந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இளம்பெண்ணின் தந்தை முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் 294(b), 354(d), 506(2) ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள வளவனூர் போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தனை தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.