ஊரிலிருந்து சென்னை வந்திறங்கும் வயதான இஸ்லாமியர் ஒருவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விலையுயர்ந்த வண்டி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. விசாரணையில் அது ஐ.ஜியின் வண்டி என்று தெரியவர, அதன் உள்ளே அவரது மகள் சடலமாக மீட்கப்படுகிறார். விபத்து வழக்கு என்று பதியப்பட்டாலும் அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவருகிறது. இருந்தும் சில காரணங்களால் அதை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தராஜனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார் ஐ.ஜி.
இந்நிலையில் விமல் மற்றும் அவரது நண்பரான சதிஷ் இருவரும் இணைந்து ‘கொத்து பரோட்டா’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். மகனைத் தேடி அலையும் சங்கிலி முருகன் அவர்களின் உதவியை நாடுகிறார். அவரது மகனைக் கண்டுபிடித்தார்களா, ஐ.ஜி மகள் கொலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆக்ஷன் திரில்லராக சொல்ல முற்பட்டு இருக்கிறது ‘துடிக்கும் கரங்கள்’.
நகரத்து ஆக்ஷன் கதைகளுக்கும் “நான் சரிப்பட்டு வருவேன்” என வாலன்டியராக வண்டியில் ஏறியிருக்கிறார் விமல். படம் முழுக்க அடிக்கும் வெயிலுக்கு உள்ளே டீ சர்ட், வெளியே பட்டன் கழட்டப்பட்ட சட்டை என “மிரட்டி” இருக்கிறார். (இன்னுமா பாஸ் இதெல்லாம் மாஸ் ஹீரோ ஃபேஷன்னு நினைச்சுட்டு இருக்கீங்க). வெள்ளந்தியாக இழுத்துப் பேசும் இவரது மாடுலேஷன் “பன்ச்” வசனங்களோடு சற்று ஒட்டாமல் தனியாகத் தெரிகிறது. இருப்பினும் உணர்ச்சிகரமான காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். உணர்வுகளைச் சரியாகக் கையாளத் தெரிந்த இவருக்குக் கதை தேர்வில் அதிக கவனம் தேவை. விமலின் நண்பராக வரும் சதிஷ் வித்தியாச வித்தியாசமாகப் பல ட்ரெண்டிங் “டீ சர்ட்”டில் வலம் வருகிறார். ஆனால் டீ சர்ட்டில் இருக்கும் ட்ரெண்ட், நகைச்சுவைகளில் சுத்தமாக இல்லை. பல இடங்களில் ‘வார்த்தை விளையாட்டு’ என காலாவதியான நகைச்சுவைகளையே அள்ளி வீசுகிறார்.
நாயகி மிஷா நரங் இப்படத்தில் வரும் வசனம் போல “Wide Ball-ல் கேட்கப்பட்ட எல்.பி.டபுள்யூ”வாக இருக்கிறார். வில்லனாக சுரேஷ் சந்திர மேனன், பில்லி முரளி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிக்ச் சிறப்பாகச் செய்துள்ளார்கள். விசாரணை அதிகாரியாக வரும் சௌந்தர்ராஜன் விறைப்பாக இருந்தாலும், பொம்மை காரினை வைத்து விசாரணைக்கு யோசிப்பது எல்லாம் சிரிப்பை வரவைக்கிறது. சங்கிலி முருகன் படம் நெடுக அழுது கொண்டு மட்டுமே இருக்கிறார்.
பார்வையாளர்கள் மனதில் திரில்லர் பாணியில் ஒரு சீரியஸ் படமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தை வர வைக்கின்றன முதல் பத்து நிமிடங்கள். ஆனால், அதன் பின்னர் ஹீரோ, ஹீரோயின் என்ட்ரி, காதலுக்காக ஸ்டாக்கிங், சிரிக்க வைக்காத காமெடி என முன்னர் வரைந்த மனக்கோட்டினை அப்படியே ரப்பர் வைத்து அழிக்கிறார்கள். படத்தில் சங்கிலி முருகன் தனது மகனைத் தேடி அலைவது போலக் கோர்வையான திரைக்கதையைத் தேடி அலைய வைக்கிறார் இயக்குநர் வேலுதாஸ். எக்கச்சக்க லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்க்கின்றன.
உதாரணத்திற்கு ஐ.ஜி மகளின் கொலை வழக்குக்கு “வாத்தியாரே சாப்பிட்டு சாயந்தரமா தேடலாமா” என்று மிகத் தாமதமாகவே `மொபைல் எண் ட்ரேசிங்’ நடப்பது, சாதாரண யூடியூப் சேனலைப் பார்த்து காவல்துறை அதிகாரிகளே பயப்படுவது என நம்பகத்தன்மையற்ற காட்சிகளின் பட்டியல் நீள்கிறது.
இரண்டாம் பாதி ஆரம்பிக்கும் முன்பே யார் கொலை செய்தது என்பது தெரிந்துவிட்டதால், அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க சீனா, ஆப்கானிஸ்தான் நாடுகள் போதைப் பொருளை இங்கே கடத்த முயற்சி செய்கிறார்கள் என்கிறார்கள். கதையில்தான் நம்பகத்தன்மை இல்லையென்றால், சொல்லும் பின் கதையிலும் இப்படி எல்லாம் காதில் பூ சுற்றினால் என்ன செய்வது? அதிலும் கட்டுக்கோப்பான “சமூக அக்கறை” எல்லாம் பேசி முடித்த பின்னர், அடுத்த காட்சியிலேயே கவர்ச்சி நடனமும் பளபளக்கும் சென்சாரும் இடம் பெறுகின்றன.
ஒளிப்பதிவாளர் ரம்மி, ஒளியுணர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கேமரா கோணங்களில் தேவையற்ற குளோஸ் அப்கள் அதிகமாக இருக்கின்றன. படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் சாப்ட்வேரில் இருக்கும் fx ஆப்ஷன் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ! நிறைய இடங்களில் வித்தியாசமான ஸ்லோ மோஷன் ஷாட்கள் வருகின்றன. ஆனால் அது எதற்கு என்பதுதான் தெரியவில்லை. அதில் போட்ட நேரத்தைத் தேவையற்ற காட்சிகளைக் கத்திரி போடப் பயன்படுத்தி இருக்கலாம். இசையமைப்பாளர் ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் அதீத இரைச்சல் தன்மையுடையதாகவே இருந்தது. கலை இயக்குநர் கண்ணன் இறைச்சி வெட்டும் இடம், பெரிய சமையல் கூடம் எனத் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
மொத்தத்தில் ஆக்ஷன் படம் என்றால் ஹீரோ எதற்காக வில்லனை அடிக்கிறார் என்பதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். அதே போல திரில்லர் என்றால் “அடுத்து என்ன” எனக் கேட்க வைக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லாத இந்தத் `துடிக்கும் கரங்கள்’ ரசிகர்களைத் துரத்தும் கரங்களாக மிரட்டுகின்றன.