நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் : ஆதி குணசேகரனை ‛மிஸ்' செய்வதாக ரசிகர்கள் சோகம்
சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து, 57 திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று(செப்., 8) காலமானார். சினிமாவை காட்டிலும் சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.
தேனியை சேர்ந்த மாரிமுத்து சினிமா மீதுள்ள ஆசை காரணமாக சினிமாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோருடன் உதவி இயக்குனராக பல்வேறு படங்களில் பணியாற்றினார். கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் பின்னர் விமல் நடித்த புலிவால் படத்தை இயக்கினார். இயக்குனராக வெற்றி பெற முடியாத மாரிமுத்து பின்னர் குணச்சித்ர நடிகராக களமிறங்கினார்.
யுத்தம் செய், கொம்பன், மருது, திருநாள், பைரவா, மகளிர் மட்டும், மதுர வீரன், எனிமி, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், மிஸ்டர் லோக்கல், புலிகுத்தி பாண்டி, சுல்தான், விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். யதார்த்தமாக நடிக்க கூடியவர் என பெயர் பெற்றவர்.
மிரட்டிய ஆதி குணசேகரன்
சினிமா மட்டுமல்லாது கடந்த ஓராண்டாக சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்து வந்தார். குறிப்பாக சினிமாவில் கிடைக்காத பெயர், புகழ் இந்த ஒரு சீரியலில் கிடைக்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தி வந்தார். இவரின் நிஜ பெயர் மாரி முத்து என்பது மறைந்து இந்த சீரியலில் வரும் குணசேகரன் பெயர் இவருக்கு நிலைத்துவிட்டது.
பணியில் இருக்கும்போதே மரணம்
தான் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை சென்னையில் டப்பிங் பேசி வந்தார் மாரிமுத்து. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டப்பிங்கை பாதியில் நிறுத்திவிட்டு, அவரே காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மாரிமுத்துவிற்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
மாரிமுத்துவின் வீடு சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ளது. மதியத்திற்கு மேல் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. மாலை வரை சென்னையில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன்பிறகு அவரது சொந்த ஊரான தேனி, வருசநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை (செப்.,9) இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
எதையும் தைரியமாக மனதில் பட்டதை ஓப்பனாக பேசக் கூடியவர் மாரிமுத்து. சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோசியம் தொடர்பாக இவர் பேசிய விஷயங்கள் சர்ச்சையானது.
மாரி முத்துவின் திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது சினிமாவை தாண்டி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆதி குணசேகரனை மிஸ் செய்வதாக வருத்தத்துடன் ரசிகர்கள் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.