தன் மனைவி சக்தி (ஷீலா) மற்றும் மகளுடன் (ஆழிவா) சென்னையில் வாழ்ந்து வருகிறார் உடற்பயிற்சி பயிற்றுநரான சரவணன் (ஹரீஷ் உத்தமன்). எதிர்பாராத நிகழ்வில் சரவணன் வீட்டிற்குள் சக்தியின் கையால் ஒருவர் கொலையாகிறார். செய்வதறியாது பதறும் அக்குடும்பம் சடலத்தை ஒரு அறையில் மறைத்து வைக்கிறது. இந்நிலையில், முந்தைய தினம் சரவணனுடன் மோதலில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் இளங்கோ (மதன் தட்சணாமூர்த்தி) அக்குடும்பத்திற்கு இடைஞ்சல் தர வீட்டிற்கு வருகிறார். மறுபுறம் தங்கள் எதிர்ப்பையும் மீறி காதல் திருமண செய்துகொண்ட மகளைக் காண முதன்முறையாக மகளின் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் சக்தியின் பெற்றோர்.
இறுதியில், சக்தியின் பெற்றோர் வருவதற்குள் தன் அதிகாரத்தால் தொல்லை தரும் இளங்கோவைச் சமாளித்து அனுப்பிவைத்தார்களா, அறையில் மறைத்து வைக்கப்பட்ட சடலத்தை என்ன செய்தார்கள் போன்ற கேள்விகளுக்குச் சற்றே இழுவையான திரைக்கதையால் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மதன் தட்சணாமூர்த்தி.
பிரதான கதாபாத்திரங்களாக வரும் ஹரீஷ் உத்தமனும், ஷீலாவும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்தான் என்றாலும், தனியாளாகக் காட்சியையும் பதற்றத்தையும் ‘ஹோல்ட்’ செய்யும் அளவிற்கான ஒரு நடிப்பை வழங்கவில்லை. காலிங் பெல், ரிங்டோன் சத்தம் என எல்லா சத்தத்திற்கும் ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் விட்டால், நாம் பாப்கார்ன் சாப்பிடும் சத்தத்திற்குக் கூட ஷாக்காவார்கள் போல! வில்லனாக மதன் தட்சணாமூர்த்தி தன் வழக்கமான உடல்மொழியுடனேயே இந்தப் படத்திலும் வலம் வருகிறார். ஆனாலும் மிரட்டுகிறார்.
வழக்குரைஞராக வரும் வசந்த் மாரிமுத்து ஒரு சில நகைச்சுவைகளை மட்டும் ஆங்காங்கே தூவிவிட்டு, அதற்குக் கூலியாகப் படம் முழுவதும் மிகை நடிப்பால் சோ….திக்கிறார். ஏட்டு சண்முகம் கதாபாத்திரத்தில் வருபவர் ஒரு வித குழப்பத்துடனேயே சுற்றிக்கொண்டு நம்மையும் சுற்றலில் விடுகிறார். ‘சண்முகம் உட்காருங்க’ என்ற வசனம் மட்டும் 27 முறை வருகிறது. ‘கொஞ்சம் தனியா பேசுவோம் சார்’ என்று முன்னரே தனியாக அமர்ந்திருந்தவர்கள், தனியாக இன்னொரு இடத்திற்குச் சென்று பேசும் காட்சியை எங்கு, எப்படித் தனியாக உட்கார்ந்து எழுதினார்களோ தெரியவில்லை.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியாக எந்தக் காரணிகளும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. ஒரு குறும்படத்திற்கான ஆக்கத்தையே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பின்னணி இசையால் சில காட்சிகளுக்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் தந்து ஆறுதல் அளிக்கிறார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம்.
ஒரு சிறிய கதைக்கருவை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் நியாயமான திரைக்கதையால் அதை முழு நீளப்படமாகப் பரிணமிக்க வைக்காமல், நீண்ட நீண்ட காட்சிகளாலும் கதையின் மையத்திலிருந்து விலகியோடும் துணைக்கதைகளாலும் இழுவையாக இழுத்து ஒரு முழு நீளப்படமாகக் காட்டப் போராடியிருக்கிறார். மொத்தமே விரல் விட்டு எண்ணும் படியாகத்தான் காட்சிகளின் எண்ணிக்கை இருக்கிறது. அக்காட்சிகளின் நோக்கமே முடிந்த பிறகும் நீட்டி நீட்டி, மொத்த திரைக்கதையையும் ஆமை வேகத்தில் நகர்த்தியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பேசிய வசனத்தையே லூப் மோடில் பேசிக் கிறங்கடிக்கின்றனர். இதனால், அடுத்த வசனம் என்னவென்று நம் காதிற்கு விழுவதற்குள் நம் வாயில் வந்துவிடுகிறது.
சில காட்சிகள் உருவாக்கும் சுவாரஸ்யமும் பதற்றமுமே கூட அக்காட்சிகளின் பாதியிலேயே நீர்த்துப் போகின்றன. முக்கியமாக, ஒரு பக்கம் மறைக்கப்பட்ட சடலத்தைக் குறித்த பயம், மறுபக்கம் இளங்கோவின் அதிகாரத் திமிரினால் வரும் கோபம், இன்னொரு பக்கம் பல ஆண்டுகளுக்குப் பின் வரும் தன் பெற்றோர் மீதான பாசம் என இறுதிப்பகுதி உணர்வுபூர்வமாகக் கைகூடி வந்தாலும் ‘இழுவையான திரைக்கதை’ அவ்வுணர்களைத் துவம்சம் செய்கிறது. மொத்த திரைப்படமும் ஒரு நீண்ட குறும்படத்தைப் பார்த்த உணர்வையே தருகிறது.
மேலும், உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்காடும் ஒரு வழக்குரைஞர், சடலத்தைப் பார்க்கும்போதும், ஒரு காவல் கண்காணிப்பாளரைப் பார்க்கும்போதும் ஏன் கைகால்கள் நடுங்கும்படி இந்த உதறு உதறுகிறார் என்ற கேள்வி இரண்டாம் பாதி முழுவதுமே வருகிறது.
முத்தாய்ப்பாக, இந்தப் படத்திற்கு ஏன் `நூடுல்ஸ்’ எனப் பெயர் வைத்தார்கள் என்ற கேள்வி தியேட்டரின் பைக் பார்க்கிங் ஏரியா வரை நம்மைப் பின்தொடர்கிறது. கதை அத்தனை சிக்கலானது என்பதாலா, அல்லது நூடுல்ஸ் செய்யும் நேரம் அளவுக்கு மட்டுமே ஓடும் ஒரு கதையை வைத்துக்கொண்டு நீட்டி முழக்கியதாலா?