பள்ளியில் பாதி.. கூடத்தில் பாதி: நிகழ்ச்சிகளும் நடத்த முடியல.. பாடமும் நடத்த முடியல..

மாடம்பாக்கம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் சமுதாயக் கூடத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, சுபகாரியங்கள் நடத்த இடம்இல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கட்டிடம் கட்ட ரூ. 60 லட்சம் ஒதுக்கப்பட்டநிலையில், பணியை மாநகராட்சி உடனே தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கத்தில் சுமார் 60 ஆண்டுகளாக மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டுக் கட்டிடம் ஒன்று உள்ளது. பழமையான கட்டிடம் என்பதால், ஓடுகளும் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.

இதனால், அருகே பெரியார் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் 4, 5-ம்வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளியில் நல்ல நிலையில் சிறிய கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு 1, 2, 3-ம்வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

‘மாடம்பாக்கம் தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பள்ளியில் பாதி, சமுதாய கூடத்தில் பாதி என மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், பள்ளி ஆவணங்கள், கோப்புகளை பாதுகாப்பாக வைக்க முடியாமல் ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர். சமுதாய கூடம், பள்ளிக்கூடமாக செயல்படுவதால், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பள்ளி ஆசிரியர்: பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து உள்ளது. இதனால், 1, 2, 3-ம் வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும், 4, 5-ம் வகுப்புகள் அருகே உள்ள பெரியார் நகர் சமுதாய கூடத்திலும் செயல்படுகின்றன. இவ்வாறு 2 இடங்களில் செயல்படுவது, ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. மாணவர்களுக்கு காலை, மதிய உணவு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

பள்ளி கட்டிடம் கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவரின் தந்தை

சரவணன்

: என் 2 குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். ஒருவர் 2-ம்வகுப்பு, இன்னொருவர் 4-ம் வகுப்பு. ஒருவரை தொடக்கப் பள்ளியில் விட்டுவிட்டு, அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள சமுதாய கூடத்தில்மற்றொரு குழந்தையை விடவேண்டி உள்ளது. குழந்தைகள் வெவ்வேறு இடத்தில் படிப்பது சிரமமாக உள்ளது. ஒரே இடத்தில் வகுப்புகளை நடத்தினால் வசதியாக இருக்கும் கட்டிட பிரச்சினையால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

சுந்தர்

மாடம்பாக்கம் பகுதியின் சுந்தர்: பள்ளி கட்டிடம் பழுது காரணமாக 2 இடங்களில் வகுப்புகள் செயல்படுவது, பெற்றோருக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரியார் நகர் சமுதாய கூடத்தில் மாதத்துக்கு 4 முதல், 10 சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

கடந்த, 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி இங்கு செயல்படுவதால் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் தனியார் திருமண மண்டபங்களில் அதிக செலவு செய்து சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை மாநகராட்சி விரைவாக கட்டித் தர வேண்டும்.

திராவிட நட்பு கழகத்தின் துணை பொதுச் செயலாளர்

இளங்கோ

: ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காகவே பள்ளிகளை அரசு நடத்துகிறது. ஆனால், அதை முறையாக பராமரிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால்தான் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளியை மாணவர்கள் நாடும் நிலைஏற்படுகிறது.

அதேபோல, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தவே அரசு சார்பில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டன. அது பள்ளிக்கூடமாக செயல்படுவதால், சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி, அதிக கட்டணம் செலுத்தி தனியார் மண்டபங்களை நாடும் நிலையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது.

அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினைதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்றும் பரவலாக புகார் எழுந்துள்ளது. தொடக்கப் பள்ளி கட்டிடப் பணியை தொடங்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாமன்ற ஒப்புதலுக்குபிறகு.. பள்ளியின் சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்றி, புதிய கட்டிடம்கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.