புதுடெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபரான பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையம் வந்த அவரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தனது மகளுடன் அப்போது உடன் இருந்தார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடன நிகழ்ச்சியை அதிபர் ஜோ பிடன் பார்த்து ரசித்தார்.
இதையடுத்து, அதிபர் ஜோ பிடன், பிரதமர் நரேந்திர மோடியை எண் 7, லோக் கல்யான் மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், MQ-9B ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வது, வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் மூன்று நாட்களில் 15க்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.