நம் அனைவரின் வாழ்க்கையில் பள்ளிப்பருவம் மிகவும் இனிமையான பகுதி. பள்ளி முடித்தவுடன் நாம் அனுபவித்த நாட்களும், அப்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்பருவத்தில் நாம் சாப்பிட்ட புதுமையான தின்பண்டங்கள் என்றும் நம் மனதில் நீங்காயிடம் பிடித்திருக்கும். அதுவும் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வரும் வழியில் பார்லே ஜி, பாப்பின்ஸ், மேங்கோ பைட் .. இவையெல்லாம் சராசரி 90-ஸ் கிட்ஸின் தினசரி பேவரைட்ஸ். இதற்குக் காரணம், அவற்றின் சுவையைத் தாண்டி, அதன்பின்னால் இருக்கும் அந்த ஒற்றை வார்த்தை பிராண்ட்… அதுதான், பார்லே!
1929-ல் நம் நாடு சுதந்திரம் அடைவதற்குமுன், சுதேசி இயக்கம் அதன் உச்சியிலிருந்தபோது, மோகன்லால் சவுஹான் அவர்களால் தொடங்கப்பட்டது பார்லே நிறுவனத்தின் பேக்கரி. இந்தியாவில் உற்பத்தி செய்த பொருள்களை ஊக்குவிக்கும் வகையில், மும்பையில் தொடங்கப்பட்ட அந்த பேக்கரியில் பன், பிரட், ரஸ்குகள், பிஸ்கட்டுகள் போன்ற தின்பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்தக் கலையை மோகன்லால் ஜெர்மனியில் கற்றுக்கொண்டார். மேலும் அங்கிருந்து இறக்குமதி செய்த பேக்கரி உபகரணங்கள் வைத்துத் தான் இந்த உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பார்லேவில் மொத்தம் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12.
பின்பு, அடுத்த தலைமுறையாக மோகன்லாலின் ஐந்து மகன்களான, மனேக்லால், பீதாம்பர், நரோட்டம், காந்தி லால் மற்றும் ஜெயந்தி லால் அடுத்தகட்ட முதலீட்டைச் செய்தனர். அப்போதுதான் புதுவகை ஸ்நாக்ஸ்கள் மற்றும் தின்பண்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஐரோப்பிய சாக்லேட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதைக் கண்டு சுதாரித்து, புதுவகை ஆரஞ்சு மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது பார்லேவின் மொத்த உற்பத்தி வருடத்திற்கு நாற்பது டன்களாக உயர்ந்தது.
ஒருபுறம், அதிகப்படியான விற்பனை நிகழ்ந்தாலும், சர்க்கரை விலை இந்தியச் சந்தையில் அதிகரித்ததால், பார்லேவின் மில், WH Brady நிறுவனத்திடம் 1934-ல் விற்கப்பட்டது.
அதன்பின்பு, சவுஹான் குடும்பம், பார்லே கார்ப்பரேஷனை மூன்று தனித்தனி வணிகங்களாக உடைத்தது. அவற்றில் பெரும்பாலானவற்றை இன்றுவரை பார்லே அக்ரோ தயாரிப்புகள் கட்டுப்படுத்துகின்றன. அதில் குளிர்பானங்கள் பிரிவை ஜெயந்தி லால் கைப்பற்றினார். மற்ற நான்கு சகோதரர்களும் பிஸ்கட் பிரிவைக் கையிலெடுத்தனர்.
தற்போது பார்லே புராடக்டுகள், விஜய், ஷரத் மற்றும் சவுஹானால் மேற்கொள்ளப்பட்டது. பார்லே-ஜி, 20-20,மேஜிக்ஸ், கிராக் ஜாக், மொனாக்கோ, மேங்கோ பைட் போன்றவை இந்த பிரிவின் புகழ்பெற்ற பிஸ்கட் வகைகள். குடிநீர் பிராண்டான பிஸ்லெரி, குளிர்பானங்களான ஆபி, ப்ரூட்டி போன்றவையும் பார்லே புராடக்டுகள்தான்.
பார்லே புராடக்டுகளைத் தற்போது நிர்வகித்துவரும் விஜய் சவுஹான் குடும்பத்தின் மதிப்பு தற்போது 5.5 பில்லியன் டாலர்கள். மேலும், போர்ப்ஸ் தரவுகளின்படி, பார்லே-வின் ஆண்டு வருமானம் 1.9 பில்லியன் டாலர்கள்.
சுதேசி இயக்கத்தின் போது தோன்றி, இன்று வரை தின்பண்ட விற்பனையில் மார்கெட்டை கெட்டியாகப் பிடித்துள்ளது பார்லே!