புதுடெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, மொரிஷீயஸ் பிரதமர் குமார் ஜெகந்நாத் உள்ளிட்டோர் புதுடெல்லி வந்துள்ளனர்.
தலைநகருக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களை மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா வரும் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளம் மூலம் வரவேற்று கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மொரிஷியஸ் பிரதமர் குமார் ஜெகந்நாத் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, உங்களை இன்று மாலை எனது இல்லத்தில் சந்திக்க இருக்கிறேன். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதில் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
“ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளேன். உலகளாவிய சவால்களைத் தீர்க்க நாடுகள் எவ்வாறு ஒன்றிணைவது என்பது குறித்து உலகத் தலைவர்களுடன் பயனுள்ள விவாதங்களை நான் எதிர்பார்க்கிறேன்” என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “உங்கள் கருத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது காலத்தின் வலிமையான சவால்களைத் தணித்து, நமது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வோம். நீங்கள் டெல்லி வந்தபோது எங்கள் கலாச்சாரத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஜி20 அமைப்பின் பங்கு முக்கியமானது. பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான வழிகாட்டுதலின் கீழ் புதுடெல்லி உச்சிமாநாடு, முக்கியப் பங்கு வகிக்கும். அதை வெற்றியடையச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்” என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயென் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லியில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி. நாம் எதிர்கொள்ளும் வலிமையான சவால்களை கூட்டாக எதிர்கொள்வோம். பயனுள்ள விவாதங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.