மதுரை:
“யார் யாரோ வந்து முயற்சி செய்து பார்த்தும் சனாதனத்தை ஒழிக்க முடியல; முளைத்து மூன்று இலை விடாத உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வந்துட்டாராம்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த சனாதன சர்ச்சை இந்தியா முழுவதும் வெடித்துள்ளது. டெங்கு, மலேரியாவை போல சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதை வட மாநிலங்களில் வேறு விதமாக ஒருதரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, சனாதனத்திற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் உதயநிதிக்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாஜக மட்டுமல்லாமல் திமுக அங்கம் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உதயநிதியின் பேச்சை கண்டித்து இருக்கின்றன. இதனால் ‘இந்தியா’ கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணாமலை பங்கேற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை இன்று நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசுகையில், “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை நீங்கள் வெற்றி பெற வைத்தால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு உசிலம்பட்டியில் சிலை அமைக்கப்படும். சுபாஷ் சந்திரபோஸின் தீரத்தை இளம் சமுதாயத்தினரிடம் நாம் சென்று சேர்க்க வேண்டியுள்ளது. இளம் சமுதாயத்தினருக்கு நல்லவர்களின் வழிநடத்தல் தேவைப்படுகிறது.
மாறாக, தீயவர்களின் வழிநடத்துதலுக்கு இளைஞர்கள் ஆளாகிவிட கூடாது. ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிக்கப் போவதாக ஒருவர் பேசி வருகிறார். சனாதனத்தை அழிக்க யார் யாரெல்லாம் முயற்சி செய்தார்கள் தெரியுமா? சனாதனத்தை ஒழித்தே தீருவது என முகலாயர்கள் முயன்றார்கள். பின்னர் ஆங்கிலேயர்கள் முயன்றார்கள். அந்த பேரரசுகளால் கூட சனாதனத்தை ஒழிக்க முடியவில்லை. முளைத்து மூன்று இலை கூட விடாத உதயநிதி வந்து சனாதானத்தை ஒழித்துக் கட்டி விடுவாராம். வேடிக்கையாகதான் இருக்கிறது” என அண்ணாமலை கூறினார்.