ரூ.16 கோடி மோசடி வழக்கு : சினிமா தயாரிப்பாளர் கைது
சென்னை : பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், 16 கோடி ரூபாய் பெற்ற மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி. மாதவ் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: கடந்த 2020ம் ஆண்டு, லிப்ரா புரோடக் ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பவர் அறிமுகமானார்.
அப்போது, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், திட்டத்தின் மதிப்பு, 200 கோடி ரூபாய் என்றும் கூறினார். மேலும் அவற்றில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி, போலி ஆவணங்களை காண்பித்தார். அதில், என்னை 16 கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்தார். ஆனால், அவர் வாக்குக் கொடுத்ததுபோல் எந்த திட்டத்தையும் துவங்கவில்லை, வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கைது
புகாரின் அடிப்படையில் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் போலி ஆவணங்களை காண்பித்து, 16 கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. இவ்வழக்கில், அசோக்நகரில் உள்ள வீட்டில், ரவீந்தரை கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து, வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், இரண்டு மடிக்கணிணி, மூன்று கணிணி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்தர் மீது ஏற்கனவே, 8 கோடி ரூபாய் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு இந்தியரும் 'ஆன்லைன்' வாயிலாக புகார்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான விஜய் என்பவரும், சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் வாயிலாக, ரவீந்தர் மீது, கடந்த ஜூன் மாதம் புகார் செய்திருந்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: 'கிளப் ஹவுஸ்' செயலி வாயிலாக அறிமுகமான சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகருக்கு முன்பணம் கொடுப்பதற்கு, 20 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். இதற்காக, 15 லட்சம் ரூபாயை, இரு தவணையாக அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பினேன். ஆனால், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ரவீந்தர் ஏமாற்றி வருகிறார். பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்தும் ரவீந்தரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.