வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 24 ஆண்டுகளில், அதாவது, 2047-ம் ஆண்டில் 48.2 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்த ஆண்டுக்கான சர்வதேச ஃபின்டெக் நிறுவனங்களின் ஆண்டுக் கூட்டத்தில் (Global Fintech Fest – 2023) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக இருப்பது வரி வருவாய்தான். வரி வருவாய் வளர்ச்சி எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறதோ, அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தரமான கல்வி, மருத்துவ வசதி, பிற நலத் திட்டங்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனில், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இந்த எதிர்பார்ப்புக்கேற்ப வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டு களில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் ஒவ்வொரு வரி வரம்பிலும் மூன்று முதல் நான்கு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சி இனி வரும் காலத்தில் தொடரும்பட்சத்தில், 2027-ல் 10 கோடி பேரும், 2036-ல் 20 கோடி பேரும், 2041-ல் 30 கோடி பேரும், 2045-ல் 40 கோடி பேரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வார்கள். இந்த எண்ணிக்கையானது 2047-ல் நம் நாட்டில் வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையில் 85.3 சதவிகிதமாக (தற்போது 22.5% மட்டுமே) இருக்கும் என்பது நம்பிக்கை அளிக்கும் எதிர்பார்ப்புப் புள்ளிவிவரங்களாக உள்ளன.
வருமான வரியைப் பலரும் தாக்கல் செய்து, அவர்கள் கட்ட வேண்டிய வரித் தொகையை சரியாகக் கட்டும்போது, வரி விகிதமானது அனைவருக்கும் குறையும். இதனால், தற்போது கட்டுவதைவிட குறைந்த அளவில் வருமான வரி கட்ட வேண்டிய நிலை உருவாகும். இப்படி மிச்சமாகும் பணத்தை மக்கள் சேமிக்கவும், தங்கள் எதிர்காலத்துக்கு முதலீடு செய்யவும் பயன்படுத்திக்கொள்வார்கள். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.
வரி வருவாய் வளர்ச்சி இப்படி அதிகரிக்கும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்று நாம் விரும்பும் அதே சமயத்தில், இந்த வருவாயை நாட்டின் வளர்ச்சிக்குச் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம், அதிக வரி செலுத்தும் மக்கள் எப்போதுமே அதிக கல்வி அறிவுடன், கேள்வி கேட்கத் தயங்காதவர்களாக இருப்பார்கள். மக்களை ஆளும் அரசியல்வாதிகளும் மற்றும் அதிகாரிகளும் வரி வருவாயைக் கொள்ளை அடித்தால், அதை எதிர்த்துப் போராட மக்கள் தயங்க மாட்டார்கள்!
மக்கள் பணம் மக்களுக்கே போய்ச் சேரத் தேவையான வெளிப்படையான நடைமுறையை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் முதலில் எடுக்க வேண்டும். அதே சமயம், வரி வருவாய் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கட்டும்!
– ஆசிரியர்