வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடுத்தாண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை, பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். அதனை பிரேசில் அதிபர் லுலா ட சில்வா பெற்றுக் கொண்டார். இதன் பிறகு மோடி பேசும் போது, வரும் நவ., மாதம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஜி20 தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவோம் என்றார். இதனுடன் ஜி20 மாநாடு நிறைவு பெற்றது.
‛ஜி-20′ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டம், டில்லியில் நேற்று (செப்.,09) துவங்கியது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றது. இரண்டாம் நாள் மற்றும் கடைசி அமர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி அடுத்தாண்டு மாநாட்டை தலைமையேற்பதற்கான பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார். அதனை லுலா ட சில்வா பெற்று கொண்டார். அடுத்தாண்டு ஜி20 மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.
தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு லுலா ட சில்வா பேசியதாவது: லட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் போது, பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியின் யதார்த்தத்தை அரசு அமைப்புகள் பிரதிபலிக்கின்றன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், வருமானம், சமத்துவமின்மை, சுகாதார வசதிகள், உணவு , பாலினம் ஆகியவற்றில் உள்ள சமத்துவமின்மை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஜி20க்கு பிரேசிலின் தலைமையில், 3 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முதலில் பசிக்கு எதிரான போராட்டம்
இரண்டாது எரிசக்தி பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி
3வது சர்வதேச நிர்வாக அமைப்புகளில் சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் பசி மற்றும் வறுமைக்கு எதிராகவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பை ஒன்று திரட்டவும் இயக்கம் ஏற்படுத்தப்படும். அடுத்தாண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: நவ., இறுதிவரை இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பு உள்ளது. இந்த இரண்டு நாட்களில் ஏராளமான ஆலோசனைகள் கருத்துகளை முன்வைத்தீர்கள். இதனை ஆய்வு செய்து அதன் முன்னேற்றத்தை எப்படி துரிதப்படுத்தலாம் என்பதை பார்ப்பது எங்களின் கடமையாகும். இதற்காக நவ.,மாதம் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூடுவோம். அதில், இந்த மாநாட்டில் கூறப்பட்ட ஆலோசனைகளை ஆராய்வோம். இதனுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement