திருச்செங்கோடு முதல் சேலம் வரை… பேக்கரி பிசினஸில் பட்டையைக் கிளப்பும் 26 வயது இளைஞர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இயங்கிவரும் ‘ஸ்ரீ சக்தி பேக்கர்ஸ்’ கடையைத் தற்போது கவனித்து வருகிறார் ஸ்ரீவிகாஸ். 26 வயதுதான் ஆகிறது. இருந்தாலும், தொழில் குறித்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்து, அற்புதமாக அதை தொழிலில் பயன்படுத்தும் இளைஞராக இருக்கிறார். தனது தந்தையோடு சேர்ந்து, பேக்கரி ஐட்டங்கள் தயாரிப்பு முறைகள் குறித்து, ஊழியர்களுக்கு ஆலோசனை தந்துகொண்டிருந்த ஸ்ரீவிகாஸிடம் பேசினோம்.

சக்தி பேக்கரி

“எங்களுக்குப் பூர்வீகமே திருச்செங்கோடுதான். என்னோட தாத்தா காலத்துல வறுமையான குடும்பச்சூழல் இருந்திருக்கு. ‘எப்படியாவது வாழ்க்கையில முன்னேற வேண்டும்’னு நினைச்ச என்னோட தாத்தா அங்கமுத்து, சிறு வயதிலேயே இங்கு இருந்த ஒரு பேக்கரிக்கு வேலைக்குப் போயிருக்கிறார். பத்து வருஷம் அங்க வேலைப் பார்த்து, சகல விஷயங்களையும் கற்றிருக்கிறார்.

அதன்பிறகு, ‘சொந்தமாக ஒரு பேக்கரி வைத்தால் என்ன?’னு நினைத்து, 52 வருஷத்துக்கு முன்னாடி முதலில் ‘முருகன் பேக்கரி’ங்கிற பெயர்ல சிறிய அளவுல பேக்கரி கடையைத் தொடங்கினார். பிரட், ரொட்டி, பிஸ்கட், பன் என்று தரமாக உற்பத்தி செஞ்சு, விற்பனை பண்ணத் தொடங்கினார்.

ஏற்கெனவே, இங்கு பல பேக்கரிகள் இருந்ததால், நாலு வருஷம் போராடித்தான், மார்க்கெட்டுல காலூன்ற முடிஞ்சுருக்கு. முதலில், இவரே பேக்கரி ஐட்டங்களைத் தயாரிச்சு, அதை டின்களில் அடைத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு ஒவ்வொரு கடையாக போய் விற்பனை செய்ய முயற்சித்திருக்கிறார்.

முதலில் பலரும் அவரது பேக்கரி தயாரிப்புகளை வாங்கிக்கல. அதன்பிறகு, போகப் போக எங்க பேக்கரியைச் சுத்தியுள்ள பத்து டீக் கடைகள், சிறிய பேக்கரிகளில் இருந்து, எங்க தாத்தாவோட கைப்பக்குவத்தை உணர்ந்து, பேக்கரி ஐட்டங்களை வாங்க ஆரம்பிச்சிருக்காங்க.

தொடர்ந்து, ‘சக்தி பிஸ்கட்ஸ்’ என்ற பெயரில் தனியாக பிஸ்கட் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகப்படுத்தினார். இதனால, எங்க பேக்கரிக்கு திருச்செங்கோட்டில் மெல்ல மெல்ல மவுஸூ வர ஆரம்பிச்சிருக்கு. இந்த நிலையிலதான், எங்க தாத்தா திடீர்னு தவற, 12-ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்த எங்கப்பா தொழிலுக்குள் வரவேண்டிய சூழல்” என்று முடித்தார்.

தொடர்ந்து, அவரது தந்தை சேகர் அதன்பிறகு நடந்தவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.

“எங்கப்பா திடீர்னு இறந்ததும், எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா, நான் விடுமுறை நாள்களில் எங்கப்பா நடத்திய பேக்கரிக்கு வந்து, பேக்கரி ஐட்டங்கள் தயாரிப்பு முதல் விற்பனை வரை சகல விஷயங்களையும் கத்துக்கிட்டேன். ஆனாலும், அப்போது இருந்த பொருளாதாரப் பிரச்னையால், எங்கப்பா நடத்திவந்த பேக்கரி தொழிலை உடனடியாக தொடர முடியலை. அதனால், இங்குள்ள தியேட்டர் ஒன்றில் கேன்டீன் எடுத்து நடத்தினேன்.

இரண்டு வருஷத்தில் ஓரளவு வருமானம் வந்ததால, அதை வைத்து இரண்டு வருடங்களாக நிறுத்திவைத்திருந்த எங்க அப்பா நடத்தி வந்த பேக்கரித் தொழிலை, ‘ஸ்ரீ சக்தி பேக்கர்ஸ்’ங்கிற பெயர்ல மறுபடியும் தொடர்ந்து நடத்த ஆரம்பிச்சேன். தியேட்டர் கேன்டீன் தொழிலையும் அஞ்சு வருஷம் நடத்தினேன். அதன்பிறகு, பேக்கரி தொழிலில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

எங்கப்பா என்னை இந்த தொழிலில் பழக்கும்போதெல்லாம், ”தரத்தை என்ன காரணத்துக்காகவும் குறைக்காதே. அதே போல, மூலப்பொருள்கள் விலையேற்றம் அடிக்கடி பயமுறுத்தும். அதற்காகவும் தரத்தை குறைக்காதே’னு கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்லிக் கொடுத்தார். அதை மனதில் வைத்திருந்த நான், அதை அரிச்சுவடிவாக வைத்து தொழிலை தொடர்ந்தேன்.

அதோடு, அப்பா சில பேக்கரி வகைகளை மட்டும்தான் செய்தார். நான் தேங்காய் பன், க்ரீம் பன், பப்ஸ், சால்ட் பிஸ்கெட் வகைகள்னு பல ஐட்டங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். அன்னன்னைக்குத் தயாரிக்கும் பொருள்களை அன்னன்னைக்கு விற்பனை செஞ்சுடுவேன். இதனால, எங்களுக்கு நிறைய கஸ்டமர்கள் கிடைச்சாங்க. அதனால, திருச்செங்கோடு நகரத்தில் உள்ள 75 சதவிகிதம் டீக்கடைகள், கல்லூரி, பள்ளி, தியேட்டர்களில் உள்ள கேன்டீன்கள், சிறிய அளவிலான பேக்கரிகளுக்கு எங்க கடையில இருந்து பேக்கரி ஐட்டங்கள் போகும் அளவுக்கு தொழிலை விரிவுப்படுத்தினேன். ஊழியர்கள் எண்ணிக்கையையும் 15-ஆக அதிகப்படுத்தினேன்.

அதே போல, எங்கப்பா விறகு அடுப்புலதான் பேக்கரி ஐட்டங்களைத் தயாரிச்சார். அதன்படி, நானும் பல வருடங்கள் விறகு அடுப்பில்தான் பேக்கரி ஐட்டங்களைத் தயாரிச்சேன். ஆனா, கஸ்டமர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் பேக்கரி வகைகளை வேகமாக தயாரிக்க சிரமமாக இருந்ததால, அதன்பிறகு நவீன அடுப்புகளுக்கும், மெஷின்களுக்கும் மாறினோம்.

அதன்பிறகு, என்னோட பையன் கடந்த 2019 – ம் வருஷம் இந்தத் தொழிலுக்குள் வந்தார். அதன்பிறகு, காலத்துக்கேற்ப புதுமைகளைப் புகுத்தி, இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவரது மகன் ஸ்ரீவிகாஸ், “நான் படிக்கிற காலத்திலேயே, ‘வருங்காலத்தில் இந்தத் தொழிலைத்தான் தொடரணும்’னு முடிவு பண்ணிதான் படிச்சேன். அதற்காக, ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே, பள்ளி விடுமுறை நாட்களில் பேக்கரிக்கு வந்து, அப்பாகிட்ட தொழில் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அதோடு, பள்ளி இறுதிப்படிப்பை முடிச்சதும், இந்தத் தொழிலுக்குப் பயன்படுற வகையில் பி.டெக் ஃபுட் டெக்னாலஜி படிச்சு முடிச்சேன்.

ஸ்ரீவிகாஸ்

நான் பேக்கரிக்கு வந்தபிறகு எங்க கடையோட தயாரிப்பு ஐட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். அதுவரை, ஸ்வீட்ஸ், காரம் வகைகள் எங்க கடையில தயாரிச்சதில்லை. 30 வகையான ஸ்வீட்ஸ், 17 வகையான காரங்களையும் தயாரிக்க ஆரம்பிச்சோம். பர்த்டே கேக், கப் கேக், புட்டிங் கேக், பனானா கேக், கேரட் கேக், டேட்ஸ் கேக், பூசணி கேக் என்று 45 வகையான கேக் வகைகளை தயாரிக்க ஆரம்பிச்சோம்.

இதே போல், பப்ஸ் வகைகளில் பன்னீர், சிக்கன், வெஜ், மஸ்ரும் என்று பலவகைகளைத் தயாரிக்க ஆரம்பிச்சோம். இதைத் தவிர, சமோசா, வெஜ் ரோல், எக் ரோல், சிக்கன் ரோல், மஸ்ரும் ரோல், கட்லெட்னு வகைகளை அதிகப்படுத்தினோம். அதே போல, ரவுண்ட் சைஸ் பன், கோக்கனட் பன், கோலா பன் என்று 6 வகையான பன்கள், ஃப்ரூட் குக்கீஸ், பட்டர் குக்கீஸ், ஸால்ட் குக்கீஸ், கோக்கனட் குக்கீஸ், பீனட் என்று கஸ்டமர்கள் விரும்புகிற ஐட்டங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

இன்னொரு பக்கம், திருச்செங்கோட்டில் மட்டும் கோலோச்சிக்கிட்டு இருந்த எங்க பேக்கரி ஐட்டங்களை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இதரப் பகுதிகள் மட்டுமின்றி, அருகில் உள்ள ஈரோடு, கரூர், சேலம் என்று நான்கு மாவட்டங்களில் விற்பனையாகும் அளவுக்கு மாற்றினோம். அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காபி ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், பள்ளி, கல்லூரி கேன்டீன்கள் என்று பல தரப்பு உரிமையாளர்களையும் அணுகி, எங்க பேக்கரி தயாரிப்புகளின் தரத்தை எடுத்துக்கூறி, அவர்களை எங்க கஸ்டமர்களாக மாற்றினோம்.

இப்படி, மெல்ல மெல்ல அதிகப்படுத்தி, இப்ப நான்கு மாவட்டங்களிலும் எங்க பொருட்களை விற்பனை செய்யும் 200 ரெகுலர் ரீடைல் கடை கஸ்டமர்கள் எங்களுக்கு இருக்காங்க. பப்ஸ் வகைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து தயாரிப்புகளையும் அவர்களுக்கு ரெகுலராக கொடுத்து வருகிறோம். பப்ஸ் ஐட்டங்களை மட்டும் திருச்செங்கோடு நகரத்தில் உள்ள கஸ்டமர்களுக்கு மட்டும் அனுப்பி வருகிறோம். தினமும் 3,000 பப்ஸ் விற்பனை ஆகுற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். அதோடு, எங்க கடைக்கு என்று பெயர் சொல்லும்விதமாக சில ஐட்டங்களையும் தயாரிக்கிறோம்.

ஸ்ரீவிகாஸ்

அதே நேரம், என்னோட தாத்தாவும், அப்பாவும் எனக்கு அறிவுறுத்திய தரத்தை நாங்க 1% கூட குறைக்கவில்லை. அதேபோல், மத்த பேக்கரிகளை விட, நாங்க குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். நான்கு மாவட்டங்களுக்கும் எங்க தயாரிப்புகளை ரெகுலராக அனுப்ப வேண்டியிருந்ததால், நான்கு வாகனங்களை வாங்கினோம். அதேபோல், லோக்கலில் சப்ளை செய்ய நான்கு டூவீலர்களை வாங்கியிருக்கிறோம்.

தயாரிப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோனதால், ரூ. 1 கோடி செலவு செய்து, தேவையான மெஷினரி வசதியை செய்திருக்கிறோம். அதோடு, ஊழியர்களின் எண்ணிக்கையை 50 – ஆக உயர்த்தியிருக்கிறோம். எங்க பேக்கரி தயாரிப்புகளின் தரம் இம்மியளவும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, பழைய மாஸ்டர்களையே இன்னும் வேலையில் வைத்திருக்கிறோம்.

அடுத்த மாசம், திருச்செங்கோடு புதுமார்க்கெட் பகுதியில் எங்க கடையோட ரீடைல் ஷாப் ஒண்ணை திறக்கப் போகிறோம். அங்கு எங்க தயாரிப்புகள் மக்கள் கடையில் அமர்ந்து சாப்பிட்டு மகிழலாம். எங்க பேக்கரி தயாரிப்புகள் மட்டுமின்றி, பழச்சாறுகள், 10 வகையான ஐஸ்க்ரீம் வகைகள் என்று அங்கு கிடைக்கும். பேக்கரி ஐட்டங்கள் தயாரிப்புக்குத் தேவையான அனைத்து மூலப்பொருள்களையும் பெங்களூரு, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்னு பல பகுதிகளில் இருந்து பர்சேஸ் செய்கிறோம். இப்போது, மாசம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறோம்.

கேக்ஸ்

இன்னும் பல பேக்கரி ஐட்டங்களை உற்பத்தி செய்யணும், பல மாவட்டங்களிலும் எங்களின் ரீடைல் ஷாப்பை ஓபன் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு ஓடிக்கிட்டு இருக்கிறோம். அந்த பேரை எங்கும் குறையாம பார்த்துகணும்ங்கிறதுதான் எனக்கு நானே வைத்திருக்கிற டாஸ்க்.

புதிதாக தொழில் தொடங்க நினைக்கிறவங்க, லாபம், நஷ்டம் தாண்டி, தயாரிப்புகளைத் தரமாக கொடுக்கணும். தாங்கள் ஆரம்பிக்கும் தொழில் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் தெரியணும். காலத்திற்கேற்ப மாற்றங்களைத் தொழிலில் புகுத்தும் திறனை வளர்த்துக்கணும்.

எல்லாவற்றையும்விட, மீனைப் பிடிக்க ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கைப் போல, தொழில் நங்கூரமாக நிலைபெறும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்கணும். அதோடு, விடாமுயற்சியும், கடின உழைப்பையும் சேர்த்துக்கொண்டு செயல்பட்டால், யாருக்கும் வெற்றி நிச்சயம். அதற்கு, 50 வருஷமாக இந்த பேக்கரி தொழிலில் இருக்கும் நாங்களே சிறந்த உதாரணம்” என்று பேசி முடித்தார்.

அவர் பேச்சு அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்பதைத் தெளிவாகக் காட்டியது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.