தென்காசி மாவட்டம், செங்கோட்டை காலாங்கரை பகுதியில் விநாயகர் சிலை வடிக்கும் தொழில் செய்து வரும் திருமலை, அவரின் மகன் முருகன் ஆகிய இருவரும், ஸ்ரீதிருமலை கைவினையகம் என்ற பெயரில் சிலை விற்பனையகம் நடத்தி வருகின்றனர். இரண்டு அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் செய்வதற்கு பல்வேறு இடங்களிலிருந்தும் ஆண்டுதோறும் இவர்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/statue_1.jpg)
ஆயிரம் ரூபாய் முதல் 50,000 ரூபாய் மதிப்பிலான சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இவர்கள் செய்யும் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் கேரளாவுக்கும் அனுப்பப்படுகின்றன. நாடு முழுவதும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், 7-ம் தேதி இவர்களின் கடைக்குச் சென்ற செங்கோட்டை டி.எஸ்.பி நாகசங்கர் தலைமையிலான காவல்துறையினர், அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கைவினையகம் நடத்தும் முருகன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உருக்கமாக பேசியுள்ள அவர், “நான் விநாயகர் சிலை செய்யும் தொழில் செய்கிறேன். கிழங்கு, ஜவ்வரிசி, கப்பகிழங்கு மாவு ஆகியவற்றைக் கொண்டே சிலைகளைச் செய்கிறேன்.வேறு எந்த கலப்படமும் கிடையாது. நான் இந்த தொழிலை 20 வருடங்களாகச் செய்கிறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/statue.jpg)
ஆனால் டி.எஸ்.பி நாகசங்கர், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் என பத்துக்கும் மேற்பட்டோர் எனது குடோனுக்கு வந்து, ‘நீங்க பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வைத்து சிலைகளைச் செய்வதாக புகார் வந்திருக்கிறது’ என்றார்கள். நான் அவர்களிடம் ’அப்படி எதுவும் இல்லை. வேண்டுமானால் நீங்கள் காட்டும் எந்த சிலையை உடைத்துக் கரைத்துக் காட்டுகிறேன். அது கிழங்கு மாவு என்பதால் முழுமையாகக் கரைந்துவிடும்’ என்று சொன்னேன். டி.எஸ்.பி நாகசங்கர், என்னிடம், ’எல்லா சிலைகளையும் கரைத்துக் காட்டுவாயா’ என்றார்
உடனே அவர், `நீ ஏதாவது கட்சியில் இருக்கிறாயா?’ என்று கேட்டார். நான் அவரிடம், பாரதிய ஜனதா கட்சியின் தரவு தள மேலாண்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவராக இருப்பதைச் சொன்னேன். உடனே, ’கட்சியில் இருந்தால் நீ பெரிய இவனா’ எனக் கேட்ட அவர், அடுத்தடுத்து ஆவேசமாகப் பேசியதுடன் என்னைப் பேசவே விடவில்லை. பின்னர் என்னை முதுகைப் பிடித்து தள்ளிவிட்டு ஓர் அடியும் அடித்தார். அதன் பிறகு, `நீ எப்படி தொழில் செய்கிறாய் என்று பார்த்து விடுகிறேன்’ என்றவர், அருகில் இருந்த இன்ஸ்பெக்டரை அழைத்து, `இவன் மீது ஏதாவது கேஸ் போட்டு வேனில் ஏற்றுங்கள்’ என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/statue_3.jpg)
`அடுத்த ஒரு வருடத்தில் உன்னையும் தொழிலையும் முடக்கும் அளவுக்கு கேஸில் சேர்த்துவிடுவேன்’ என்று டி.எஸ்.பி நாகசங்கர் மிரட்டினார். காவல்துறையில் இவரைப்போல ஒரு சில அதிகாரிகள் இருப்பதால்தான் டிபார்ட்மென்ட்டுக்கே கெட்ட பெயர் வருகிறது. நான் நாளையுடன் கடையைத் திறக்க மாட்டேன். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் இதுவரை புக் செய்தவர்களின் சிலையை மட்டும் கொடுப்பேன். பிறகு எதையும் விற்காமல் 18-ம் தேதி நானே எல்லா சிலைகளையும் கொண்டுபோய் கரைத்து விடுவேன். இந்த அரசு தொழில் செய்பவர்களுக்கு சப்போர்ட் செய்வதாகச் சொல்கிறது. ஆனால் என்னை மாதிரி ஆள்களை அழிக்கிறது” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
அவரது பேச்சு வைரலாக பரவிவரும் நிலையில், அவரிடம் இது பற்றி கேட்டோம். “எங்க குடும்பம் கடந்த 40 வருடங்களாக பொம்மை செய்யும் தொழில் செய்து வருகிறோம். கடந்த 20 வருடங்களாக விநாயகர் சிலை செய்கிறோம். 5 சிலைகளுடன் தொடங்கிய இந்தத் தொழில் நன்றாக விரிவடைந்து இன்று 600 சிலைகள் வரை செய்கிறோம். திருவனந்தபுரம் வரை எங்களிடம் இருந்து தான் சிலை வாங்குகிறார்கள். இத்தனை வருடங்களாக எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/statue_4.jpg)
இந்த வருடம் போலீஸார் கடுமையான நெருக்கடி கொடுக்கிறார்கள். சிலை வைப்பதற்கான ஆர்டர் காப்பி கொடுத்தால் மட்டுமே சிலை செய்து கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் சொல்கிறார்கள். ஆனால் சிலை வைக்க அனுமதி கேட்பவர்களுக்கு கடைசி நேரத்தில்தான் அனுமதி கொடுக்கிறார்கள். கடையின் வெளியே அமர்ந்துகொண்டு சிலை வாங்க வருபவர்களிடம், எங்கிருந்து வருகிறார்கள், எத்தனை அடி உயர சிலைக்கு ஆர்டர் கொடுக்க வந்திருக்கிறார்கள் என அனைத்தையும் விசாரித்து எழுதிக் கொண்டே உள்ளே அனுப்புவதால், வருபவர்கள் அச்சப்படுகிறார்கள்.
பல்வேறு விதங்களிலும் இந்த வருடம் தொழில் செய்ய விடாமல் நெருக்கடி கொடுக்கும் போலீஸார், எங்கள் கடைக்குள் வந்து மிரட்டினார்கள். நாங்கள் நியாயமான தொழில் செய்கிறோம். ஆனால், கஞ்சா விற்பவர்களைப் பிடிக்க வந்தது போல மொத்தமாக வந்து மிரட்டினார்கள். அதனால் அவர்கள் முன்னிலையிலேயே ஓர் இரண்டடி சிலையை உடைத்துக் காட்டினேன். அதன் பிறகும் என்னைத் தொழில் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/statue_5.jpg)
என்னை அடித்ததோடு 80 வயது நிரம்பிய எனது தந்தையை அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதால், என் தந்தை மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். போலீஸாரின் நெருக்கடி காரணமாக நான் சிலைகளை விற்கப்போவதில்லை. நானே விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கரைக்க முடிவு செய்திருக்கிறேன். என்னையும் என் தந்தையையும் அவமரியாதையாகப் பேசியதோடு, கஞ்சா விற்பவனைப் பிடிக்க வந்தது போல வந்தார்கள். இத்தனையும் நடந்தும் என்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். கடவுளுக்காக எதையும் தங்கிக் கொள்வேன். இதற்கெல்லாம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
இது குறித்து டி.எஸ்.பி-யான நாகசங்கரிடம் கேட்டதற்கு, “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்றோம். அவர்தான் எங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்” என்றார்.