இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழையின் காரணாமாக ரத்து செய்யப்பட்டது.
இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருக்கிறது. மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடைபெற இருக்கிறது. இதனிடையே நேற்று கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“குழந்தை பிறந்ததற்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு என்னுடைய வாழ்த்துகள். கடவுள் அவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். அவரும் உங்களைப் போல் புகழ்பெற்றவராக வரவேண்டும்” என்று ஷாஹீன் அப்ரிடி வாழ்த்து தெரிவித்து பரிசை வழங்கி இருக்கிறார். அதற்கு ஜஸ்பிரித் பும்ராவும் கைக்குலுக்கி தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதிதான் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்று பெயரிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அப்போது அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.