ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 9ம் தேதி சென்னை, ஈக்காட்டுதாங்கலிலுள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், ஈக்காட்டுதாங்கல் முனீஸ்வரன் கோவில் ஆக்கிரமிப்பு பிரச்னைக் குறித்து பேசினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Screenshot_2023_09_11_at_3_21_41_AM.png)
இதுபற்றி பேசிய விஷால், “இந்தக் கோயில் கட்டிக் கிட்டத்தட்ட 63 வருஷம் ஆகி இருக்கு. ‘PWD’ வந்து இன்னைக்கு, ‘இந்த இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணி இருக்காங்க’ அப்டீனு இங்க போர்டு வச்சிருக்காங்க. இந்த இடத்தைக் காலி பண்ணனும்னு சொல்றாங்க. ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு ஒன்னும் புதிய விஷயம் கிடையாது. நடிகர் சங்க நிலத்தையே மீட்டுட்டேன். வாழ்க்கையில் எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இதுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உண்மையிலேயே கடவுள் நல்லது பண்ணுவார்.
நான் சும்மா சொல்லிட்டு போற மனுஷன் கிடையாது. காலி பண்ணச் சொல்லி இங்க போர்டு வைக்கட்டும், அந்தச் சிலையை உடைக்கிறதுக்கு முன்னாடி உங்கள் சார்பா நான் தான் முதலில் வந்து நிற்பேன். 63 ஆண்டுகளாக இத்தனைக் குடும்பங்கள் இங்கு வாழ்ந்து, இந்த இடத்தை அழகுபடுத்தி இருக்காங்க. ஒரு கோயில அழகுபடுத்த வேண்டும் என அவங்க வந்து கேட்ட விண்ணப்பம் ஒரு அடிப்படை விண்ணப்பம் தான்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/vishal_gears_up_to_ensure_intro_fight_sequence_of_laththi_is_spot_on_01_copy.jpg)
இதைத் தாண்டி வந்து இந்த இடத்தை என்ன அழகுபடுத்த முடியும், இதை செஞ்சா என்ன புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். சும்மா ஒரு கிரீன் பேனால ஒரு ஐஏஸ் அதிகாரி கையெழுத்துப் போடுவாரு, உடனே இங்க வந்து காலி பண்ணச் சொல்லி ஒரு போர்டு போடுவாங்க.
இங்க அதைத் தாண்டி ஒரு விஷயம் இருக்கு, நம்மளோட உணர்வுனு ஒன்னு இருக்கு. நமக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கையில்தானே ஓட்டு போட்டோம். கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்கும். நல்லது நடக்கிற வரைக்கும் நான் உங்களைக் கைவிட மாட்டேன்” என்று உறுதியளித்துப் பேசினார்.