சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான், திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தைத் கொண்டாடும் வகையில் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிதான், ரசிகர்களிடையே மறக்கவே முடியாத சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
கோல்டு, பிளாட்டினம், சில்வர் என ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஆவலோடு சென்ற ரசிகர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்காததால் நெரிசல் கடற்கரை சாலையாக மாறியது. அதேநேரம், ஏ.ஆர் ரஹ்மானை உள்நோக்கத்துடன் சிலர் விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் மீதும் ஏ.ஆர். ரஹ்மான் மீதும் விமர்சனங்கள் பரவிவரும் நிலையில், ஏ.ஆர் ரஹ்மான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்ததோடு, ‘இசை நிகழ்ச்சியியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை மெயிலில் அனுப்புங்கள்’ எனவும் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர் ரைஹானாவிடம் பேசினேன்.
“ரஹ்மான், ரசிகர்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டவர். அதனால்தான், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவிருந்த ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியை மழையின் காரணமாக தள்ளிவைத்தார். ரசிகர்களுக்கு எந்த உடல்நல பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அன்று நிகழ்ச்சி நடைபெறவில்லை. அப்படிப்படிப்பட்டவர், தனது ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதையோ சங்கடத்திற்கு ஆளாவதையோ விரும்புவாரா? வீக்கெண்டுகளில் ஈசிஆர் சாலை எப்போதும் கொஞ்சம் போக்குவரத்து நெரிசலாகத்தான் இருக்கும். பாண்டிச்சேரியிலிருந்து வருபவர்கள்; வந்து செல்பவர்கள், வீக்கெண்டை கொண்டாட ப்ளான் செய்தவர்கள் என கூட்டம் நிறைந்திருக்கும்.
அதுவும், அந்த வழியில் மெட்ரோ பணிகளும் நடந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான், நேற்று அவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கும் ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள்தான் சரியாகத் திட்டமிட்டு செய்திருக்கவேண்டும். ஏற்கெனவே, துபாயில் ரஹ்மான் கான்செர்ட் நடந்தபோது, நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அப்போது, ரசிகர்கள் மீண்டும் ரிஜிஸ்டர் செய்து புது டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டார்கள்.
‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி ஆகஸ்ட்12-ம் தேதியிலிருந்து செப்டம்பர்-10 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டப்பிறகு ரசிகர்கள் புது டிக்கெட்டை வாங்கினர்களா என்பது தெரியவில்லை. ஒரே டிக்கெட்டை பலபேருக்கு பிரிண்ட் எடுத்துக்கொடுத்து நிறையபேர் வந்திருக்கவும் வாய்ப்புள்ளது. என்ன குளறுபடி நடந்தது என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், இப்படியொரு நிலை ஏற்பட்டதற்கு ரசிகர்களிடம் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார் வருத்தமுடன்.