IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி நேற்று தொடங்கினால், மழை காரணமாக இன்று தள்ளிவைக்கப்பட்டது. போட்டி நேற்று நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தே இன்றைய ஆட்டம் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது எனலாம். அவர்களின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் சில காரணங்களுக்காக இன்று விளையாடவில்லை.
இந்திய அணி 24.1 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது. விராட் 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்களுடனும் பேட்டிங்கை தொடங்கினர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒருமுனையில் சுழற்பந்துவீச்சையும், மறுமுனையில் வேகப்பந்துவீச்சையும் கொண்டு வந்தார். இன்றைய ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் இந்திய பேட்டர்கள் தடுப்பாட்டம் விளையாடி சிறுகச் சிறுக ரன்களை சேர்த்தனர் எனலாம்.
அதன்பின், ஓவர்கள் செல்ல செல்ல இருவரிடம் இருந்து ரன்கள் குவிய தொடங்கியது. நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி, இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபாகிம் அஷ்ரப் ஆகிய அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சீராக ரன்களை குவித்தனர். பவுண்டரிகள் அவ்வப்போது வந்தாலும் டாட் பந்துகளை குறைந்து சிங்கிள், டபுள்ஸ் என ஓடி ரன் வேகத்தை உயர்த்தியே வைத்திருந்தனர்.
ராகுலின் அந்த சிக்ஸர்
ஷதாப் கான் ஓவரில் ராகுல் அடித்த ஃபிளிக் சிக்சர் பலரையும் கவர்ந்தது. இருவரும் அரைசதத்தை கடந்த பின் ரன் வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினர். 30-40 ஓவர்களில் மட்டும் 76 ரன்களை இந்த குவித்திருந்தது. எனவே, மூன்றாவது பவர்பிளே தொடங்கியவுடன் (41-50 ஓவர்கள்) கூடுதல் ஒரு பீல்டர் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். அதனால், குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த இணை அதிரடியை தொடர்ந்தது.
ராகுல், கோலி சதம்
இஃப்திகார் அகமது 43ஆவது ஓவரை வீசினார். அதில் விராட் கோலி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மொத்தம் 15 ரன்களை அந்த ஓவரில் எடுத்தார். தொடர்ந்து, கேஎல் ராகுல் ஒருநாள் அரங்கில் தனது 6ஆவது சதத்தை பதிவு செய்தார். அதேபோல், விராட் 90 ரன்களில் இருக்கும் போது, நசீம் ஷா ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டினார். அந்த இன்னிங்ஸில் விராட் கோலியின் சிறந்த ஷாட் அதுவாகவே இருக்கும். தொடர்ந்து அவரும் தனது 47ஆவது ஒருநாள் சதத்தை (ஒட்டுமொத்தமாக 77) இன்று பதிவு செய்தார்.
The two centurions for #TeamIndia pic.twitter.com/mdMg5lNYHP
— BCCI (@BCCI) September 11, 2023
கோலியின் கச்சிதமான ஃபினிஷிங்
இதற்கிடையில், 49ஆவது ஓவரில் இரண்டு பந்துகளை வீசியிருந்த நசீம் ஷா மணிக்கட்டில் ஏற்பட்ட வலி காரணமாக களத்தை விட்டு சென்றார். மீதம் இருந்த 4 பந்துகளை இஃப்திகார் வீசினார். மேலும், கடைசி ஓவரை அஷ்ரப் வீசினார். அந்த ஓவரில் 5ஆவது பந்தில் விராட் பவுண்டரி அடிக்க அந்த பால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஃபிரிஹிட்டிலும் விராட் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் லாங் திசையில் மிரட்டலான வகையில் சிக்ஸர் அடித்து விராட் அசத்த, இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்களை எடுத்தது.
13 ஆயிரம் ரன்கள்…
விராட் கோலி 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 122 ரன்களுடனும், ராகுல் 12 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 111 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இன்றைய ஆட்டத்தில் விக்கெட் விழவில்லை. இன்று 25.5 ஓவர்கள் வீசப்பட்டதில் இந்திய பேட்டர்கள் 209 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விராட் கோலி 98 ரன்களை எடுத்தபோது, ஒருநாள் அரங்கில் அவரின் 13 ஆயிரம் ரன்களை கடந்து, இதுவரை வேகமாக 13 ஆயிரம் ரன்களை ஒருநாள் அரங்கில் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.