`இந்தியன்’ ஆரம்பித்து வளரும் போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான இடங்கள் அதில் தெளிவாக இருந்தன. காலம் நிர்ணயிக்க முடியாமல் பிற்பாடு சரியான நேரம் பார்த்து `இந்தியன் 2′ ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள் ஷங்கரும், கமலும்.
ஆனால், அடுத்தடுத்துக் கூடிய தயாரிப்பு செலவுகள், அதைச் செய்வதற்கான தயாரிப்பு நிறுவனம் என யோசனைகள் எழுந்தபோது கமல் பேச்சுவாக்கில் ‘தசாவதாரம்’ தயாரிப்பிலிருந்தபோதே ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் ‘இந்தியன் 2’ பற்றிப் பேசியிருக்கிறார். அடுத்து ‘ஐ’ படத்தைத் தயாரிக்கும் ஏற்பாடுகளிலிருந்ததால் ரவிச்சந்திரன் இதில் நுழையவே இல்லை. ஏவிஎம் அதற்கு முன்னரே தன் தயாரிப்பை நிறுத்தியிருந்தது. பிற்பாடு அந்த முயற்சியை வைத்துக் கொள்ளலாம் என்ற போது ‘லைகா’ நிறுவனம் தமிழ் சினிமாவில் ‘கத்தி’ மூலமாக நுழைந்து அடுத்தடுத்து படங்கள் தயாரித்தது.
ஏற்கெனவே வேறு தயாரிப்பாளரை வைத்து ‘இந்தியன் 2’ எடுப்பதாக இருந்து அது கைகூடாமல் போனது. பின்னர் கமலிடம் லைகா சுபாஸ்கரன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் ‘இந்தியன் 2’ பற்றிப் பேசியிருக்கிறார். யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டார் சுபாஸ்கரன். அடுத்தடுத்த சந்திப்புகளில் ‘இந்தியன் 2’க்கு வடிவம் கிடைத்துவிட்டது. உடனே ஸ்கிரிப்ட்டில் உட்கார்ந்து தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்து அந்த ஸ்கிரிப்ட் கமல் கைக்கும் வந்து படத்தை ஆரம்பிக்கிற நிலைக்கு ஆறு மாதங்களுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவை ஷங்கரே தயார் செய்து கமலுக்கு அனுப்பினார். எந்தத் திருத்தமும் இல்லாமல் அந்தக் குழுவை உடனே ஓகே செய்தார் கமல். உடனே நடிகர்கள், நடிகைகள் எனத் தேர்வு செய்து அப்படியே அவர்களும் கிடைத்தார்கள். காஜல் அகர்வால் நடுவில் திருமணமாகி குழந்தையும் பெற்று, மறுபடியும் கதாநாயகியாக இடம்பெற்றுவிட்டார். சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் பிரித் சிங், பிரியா பவானி சங்கர் என அணி சேர படப்பிடிப்பு 80% சதவிகிதம் முடிந்து விட்டது.
இப்போது விசேஷம் என்னவென்றால் `இந்தியன் 3′ செய்வதற்கான அனைத்து விஷயங்களும் இப்போதே ரெடியாகி இருக்கிறதாம்.
இன்னும் 25 நாள்கள் கமல் கால்ஷீட் கொடுத்தால், மற்றவர்களிடமும் கால்ஷீட் பெற்று மூன்றாவது பாகமும் ரெடியாகி விடுமாம். இதை ஷங்கர் உலகநாயகனிடம் சொல்ல, யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்.
ஏற்கெனவே உதயநிதி தாமாக முன்வந்து கமல், ஷங்கர், லைகா என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தித்தான் ‘இந்தியன் 2’ நிறைவு பெறுகிற நிலைக்கு வந்தது. இப்போதைக்கு ‘இந்தியன் 2’வை நிறைவு செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். ஷங்கர் ராம் சரணை வைத்து எடுக்கும் ‘கேம்சேஞ்சர்’ தெலுங்குப் படத்தை எடிட் செய்துவிட்டு முழுதாகத் தயாராகும் முன்னால் ‘இந்தியன் 2’வை முடிக்க ரெடியாகிறார். அமெரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்த கமலும் திரும்பிவிட்டார்.
எல்லாம் சரியானால் கமல், ஷங்கர், லைகா ஒரே அலைவரிசையில் வந்தால் ஒரே மூச்சாக ‘இந்தியன் 3’-யும் முடிந்துவிடும் என்கிறார்கள். அதற்கு முன்னால் ‘இந்தியன் 2’ நிறைவு பெற வேண்டும் என்பதில்தான் லைகா குறியாக இருக்கிறது.