விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி நடித்த ’96’, ‘துக்ளக் தர்பார்’, ‘மாஸ்டர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களைத் தயாரித்த ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார், விஜய் சேதுபதி குறித்தும் ‘லியோ’ படம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய லலித், “விஜய் சேதுபதி சார்கூட நான்கு படம் பன்ணிட்டேன். ’96’ படத்திற்கு அவர் சம்பளமே வாங்கவில்லை. அந்தக் காரணத்திற்காகவே ’96’ படம் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அடுத்து அவருடன் ‘துக்ளக் தர்பார்’ படம் பண்ணினேன். அப்படத்தை ஆரம்பித்த போதுதான் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்திற்கு விஜய் சேதுபதிதான் வில்லனாக வேண்டும் என்றார். பிறகு, விஜய் சேதுபதியின் கால் சீட்டை மாற்றி ‘மாஸ்டர்’ படத்தை முடித்துவிட்டு ‘துக்ளக் தர்பார்’ பண்ணிணோம்.
அதன்பிறகு, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பண்ணினேன். இப்படி விஜய் சேதுபதியுடன் மட்டும் நான்கு படங்கள் பண்ணிணேன். நான்கு படங்களுமே நல்ல வெற்றியைப் பெற்றது. ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன், இந்த நான்கு படத்திலும் நல்லா சம்பாதித்தேன், நல்ல லாபம்.
எல்லோரும் நடிகரின் ரசிகர்கள் என்றுதான் சொல்வார்கள். உண்மையில் நான் எடிட்டர் பிலோமின் ராஜின் ரசிகன். இப்போதான் ‘லியோ’ படத்தின் முதல் பாதியைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜிடம், ‘சூப்பரா இருக்கு…எடிட்டர் பிலோமின் நல்ல பண்ணிருக்கார்’ என்றேன். உடனே லோகேஷ், ‘நான் தான் டைரக்ட் பண்ணினேன். நீங்க என்ன சார், பிலோமின் ராஜ் நல்லா பண்ணிருக்கார்னு சொல்றீங்க…’ என்று விளையாட்டாகக் கோபித்துக் கொண்டார்” என்று கூறினார்.