ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி : ஆய்வுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். திறந்தவெளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்துள்ளன. அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை சரியாகப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பலர் விழா நடக்கும் அரங்கிற்குள்ளும் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

நேற்று மாலையிலிருந்தே இது குறித்து ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலர் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். குறிப்பாக போடப்பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக டிக்கெட்டுகளை விற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 25 ஆயிரம் பேருக்கான நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிகழ்ச்சியை காண வந்த மக்கள் கடும் சிரமரத்திற்குள் உள்ளாகினர்.

சில பெண்கள் தாங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு உயிர் பிழைத்து வந்ததே பெரிது என கூறிய வீடியோக்கள் வைரலாகின. மேலும் இந்த நிகழ்ச்சியான கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிக்கினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இசை நிகழ்ச்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டன. எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையானது. பார்க்கிங் உள்ளிட்ட மற்ற விஷயங்களுக்கு எப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன உள்ளிட்டவை குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ்
இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஏசிடிசியை சேர்ந்த ஹேம்நாத், யாழினி, பூங்கொடி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடியே பிரதான காரணம் என்றாலும் இந்த நிகழ்வால் ரஹ்மானுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.