டெங்கு ஒழிப்பு, இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம்

சென்னை: டெங்கு ஒழிப்பு மற்றும் இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, திருநெல்வேலி, தென்காசி, கோவை, கடலுார், வேலுார் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தான். சுகாதாரப் பணிகள் சரியாக மேற்கொள்ளாததே டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்தான் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மதுரவாயல் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக் ஷன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. டெங்கு பாதிப்பு என்பது உலகம் முழுவதிலுமே மழைக்காலங்களில் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வடகிழக்கு பருவ மழையின் போதும் டெங்கு பாதிப்பு தொடங்குகிறது. டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தாலும், 253 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொசு ஒழிப்பு பணிகளை மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, டெங்கு பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களுடனான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது. வரும் 16-ம் தேதி அனைத்து சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது.

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பெட்டகம் ஒப்பந்த பணி, கருப்பு பட்டியலில் உள்ளநிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற கருப்பு பட்டியலில் வந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளவும், டெண்டரில் கலந்து கொள்ளவும் முடியாது. அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வரவில்லை என்று 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.